/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சென்னை ரயிலில் கூடுதல் பெட்டிகள் வேண்டும்
/
சென்னை ரயிலில் கூடுதல் பெட்டிகள் வேண்டும்
ADDED : ஜன 18, 2024 12:44 AM

உடுமலை : உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், சொந்த ஊர்களுக்கு ரயில்களில் செல்ல மக்கள் திரண்டனர். சென்னை ரயிலில் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். எனவே அந்த ரயிலில் முன்பதிவில்லாத கூடுதல் பெட்டிகள் இணைக்க ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. தற்போது, கோவை - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து, ஏராளமானோர் உடுமலை வழியாக சென்னை உட்பட பல்வேறு நகரங்களுக்கு ரயில்களில் பயணம் செய்கின்றனர். மேலும் இங்கு தொழிற்சாலை, கம்பெனிகளில் பணிபுரியும் வட மாநிலத்தினரும், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பாலக்காடு - சென்னை ரயிலை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், அந்த ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைந்த அளவே உள்ளதால், அதில் பயணியர் முண்டியடித்துக்கொண்டு ஏறுகின்றனர். இதில் குழந்தைகள், முதியோர் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இதனால், அவர்கள் ரயிலில் அமர இடமில்லாமல், நீண்ட துாரம் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டியதுள்ளது.
எனவே, பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் அல்லது கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக சென்னை ரயிலில், பயணியரின் சிரமத்தை போக்கும் வகையில், கூடுதல் பெட்டிகள் இணைக்க, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உடுமலை பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.