/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஜவுளித்துறையை மேம்படுத்த நவீன தொழில்நுட்பம் தேவை'
/
'ஜவுளித்துறையை மேம்படுத்த நவீன தொழில்நுட்பம் தேவை'
'ஜவுளித்துறையை மேம்படுத்த நவீன தொழில்நுட்பம் தேவை'
'ஜவுளித்துறையை மேம்படுத்த நவீன தொழில்நுட்பம் தேவை'
ADDED : அக் 03, 2024 06:23 AM

கோவை : இந்திய ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, அகில இந்திய காங்., தொழில் வல்லுனர்கள் பிரிவு சார்பில் கோவையில் நேற்று நடந்தது.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் பேசுகையில், ''உலகத் தரத்திலான ஜவுளி தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைக்க முதலீட்டை உயர்த்த வேண்டும். சிறு, குறு தொழில்கள் ஏற்றுமதியில், போட்டியிட வேண்டும் என்றால் தொழில் நுட்பம், முதலீடு இல்லாமல் முடியாது.
ஜவுளித் துறையில் மட்டுமல்லாது, பல தொழில்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. ஏற்றுமதியை அதிகரிக்க கம்பெனி சட்டம், ரிசர்வ் வங்கி விதிகள், வருமான வரி சட்ட விதிகளில் இருந்த கடுமைகள், 1991ம் ஆண்டு அகற்றப்பட்டன. தற்போது அவை பின்வாசல் வழியாக உள்ளே நுழைகின்றன. கட்டுப்பாடுகள் உள்ள பொருளாதாரம், உலகில் போட்டி பொருளாதாரமாக உருவெடுக்க முடியாது. தொழில்நுட்பமும், கட்டுப்பாடுகளும் தான் பிரச்னையாக உள்ளன. இப்பிரச்னைகளை அரசு தான் தீர்க்க வேண்டும்,'' என்றார்.
பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை குழு, முன்னாள் உறுப்பினர் ரத்தின் ராய் பேசுகையில், ''இன்று வெளிநாட்டு மக்களின் தேவைக்காகத்தான், பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. முதலில் நமது மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய தயாரிக்க வேண்டும்,'' என்றார்.
அகில இந்திய காங்., தொழில் வல்லுனர்கள் பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, மாநிலத்தலைவர் குமரவேல், கோவை கிளை உறுப்பினர் செல்வராஜ், தேசிய ஒருங்கிணைப்பாளர் கவுஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, தொழில்துறையினர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு, விளக்கம் அளிக்கப்பட்டது.

