/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நீட்' மற்றும் ஜே.இ.இ., பயிற்சி வகுப்பு துவக்கம்! ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு மையம்
/
'நீட்' மற்றும் ஜே.இ.இ., பயிற்சி வகுப்பு துவக்கம்! ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு மையம்
'நீட்' மற்றும் ஜே.இ.இ., பயிற்சி வகுப்பு துவக்கம்! ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு மையம்
'நீட்' மற்றும் ஜே.இ.இ., பயிற்சி வகுப்பு துவக்கம்! ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு மையம்
ADDED : நவ 10, 2025 11:54 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 'நீட்' மற்றும், ஜே.இ.இ., என உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வு எழுதுவதற்கான பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவர்களுக்கு, உயர் கல்வியில் பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து தொழில் முறை படிப்புகளிலும் சேரும் வகையில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இதன் வாயிலாக, கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான மாணவர்கள், பயனடைந்தும் வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை வாயிலாக, தற்போது, மாவட்டந்தோறும் ஒவ்வொரும் ஒன்றியத்திற்கு உட்பட்டு, ஒரு பள்ளியை மையமாகக் கொண்டு, 'நீட்' தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோன்று, என்.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.டி.கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான, ஜே.இ.இ., என்ற நுழைவுத் தேர்வுக்கும் பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொள்ளாச்சி தாலுகாவில், பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில், வாரந்தோறும் சனிக்கிழமை உயர்கல்வி தேர்வு எழுதுவதற்கான பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
இதற்காக, பாடத்திட்டங்களுக்கு ஏற்ப பள்ளிகள் தோறும் விருப்பம் தெரிவிக்கும், 3 முதல் 4 மாணவர்கள், பெற்றோர் ஒப்புதலுடன் பயிற்சி வகுப்பில் சேர, அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது குறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இந்த பயிற்சி வகுப்பு காலை, 9:00 முதல், மாலை, 4:15 மணி வரை நடக்கிறது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு, தனித்தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, அந்தந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மாணவர்கள் பயிற்சி வகுப்பில் முறையாக பங்கேற்கின்றனரா என கண்காணிக்க வருகை பதிவேடும் பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஒன்றியங்களிலும், ஒருங்கிணைப்பாளராக, தற்காலிக ஆசிரியர்கள், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
பயிற்சி வகுப்பில் சந்தேகங்களை கேட்டறிய மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. தவிர, மாணவர்களுக்கு புரஜெக்டர் பயன்படுத்தி 'ஸ்மார்ட் போர்டு' வாயிலாக முழுமையான பயிற்சி அளிப்பதுடன் அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இரு வேளை டீ, ஸ்நாக்ஸ் வழங்கப்படுகிறது. தற்போது, ஒவ்வொரு பயிற்சி வகுப்பிலும், 30 பேர் வீதம் பங்கேற்று வருகின்றனர்.
நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும் வரை இப்பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்பதால், இனி வரும் நாட்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் வாயிலாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பல திறமையான மாணவர்கள், உயர்கல்வியில் சிறந்து விளங்குவர்.
இவ்வாறு, கூறினர்.

