/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி மேலும் ஆறு வட்டாரங்களுக்கு விரிவாக்கம்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி மேலும் ஆறு வட்டாரங்களுக்கு விரிவாக்கம்
அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி மேலும் ஆறு வட்டாரங்களுக்கு விரிவாக்கம்
அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி மேலும் ஆறு வட்டாரங்களுக்கு விரிவாக்கம்
ADDED : நவ 05, 2025 11:05 PM
கோவை: கோவை மாவட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் பிளஸ்-2 மாணவர்களுக்கு, 'நீட்' நுழைவுத் தேர்வுக்காக நடத்தப்படும் 'வெற்றி பள்ளிகள்' சிறப்பு பயிற்சித் திட்டம், மேலும் 6 வட்டாரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, காரமடை வட்டாரத்தில் (மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி - 90 மாணவர்கள்), சர்கார் சாமக்குளம் வட்டாரத்தில் (எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப்பள்ளி - 68 மாணவர்கள்), மற்றும் சூலூர் வட்டாரத்தில் (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி - 55 மாணவர்கள்) ஆகிய மூன்று சிறப்பு பள்ளிகளில், சனிக்கிழமைகளில் பயிற்சி வழங்கப்பட்டது.
தற்போது தொண்டாமுத்தூர் (அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி), கிணத்துக்கடவு (அரசு மேல்நிலைப்பள்ளி), மற்றும் பெரியநாயகன்பாளையம் (அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி) வட்டாரங்களில், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் எளிதாக அணுகக்கூடிய போக்குவரத்து வசதிகள், ஸ்மார்ட் போர்டு உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்புகள் வசதிகள் உள்ள, சிறந்த அரசு பள்ளிகள் வட்டார அளவில் மாதிரிப் பள்ளிகளாகத் தேர்வு செய்யப்பட்டு, மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கான முழுமையான பயிற்சி வழங்கப்படுகிறது.
வால்பாறை, பொள்ளாச்சி (தெற்கு), மற்றும் பேரூர் ஒன்றியங்களிலும் இதேபோன்ற வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித் துறை இத்திட்டத்தின் முதற்கட்ட செயல்பாட்டிற்காக ரூ. 54.73 கோடியை ஒதுக்கியுள்ளது. பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு ஒரு வகுப்பிற்கு ரூ.1,000 தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. நீட் மட்டுமின்றி, ஜே. இ.இ., க்யூட் போன்ற பிற நுழைவுத் தேர்வுகளுக்கும், இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவர்களுக்கு பயிற்சி கையேடுகள் மற்றும் அவர்கள் விரும்பும் ஒரு போட்டித் தேர்வுக்கான கட்டணமும், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

