/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்கு 'ஏ.ஜே.கே., கால்பந்து' கோப்பையை தட்டியது நெல்லிப்புழா அணி
/
பள்ளி மாணவர்களுக்கு 'ஏ.ஜே.கே., கால்பந்து' கோப்பையை தட்டியது நெல்லிப்புழா அணி
பள்ளி மாணவர்களுக்கு 'ஏ.ஜே.கே., கால்பந்து' கோப்பையை தட்டியது நெல்லிப்புழா அணி
பள்ளி மாணவர்களுக்கு 'ஏ.ஜே.கே., கால்பந்து' கோப்பையை தட்டியது நெல்லிப்புழா அணி
ADDED : பிப் 05, 2025 11:51 PM

கோவை: ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லுாரியில், 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான 'ஏ.ஜே.கே., கால்பந்து போட்டி' நடந்தது.
இதில், தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்த, 22 அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில், அரசு மேல்நிலைப் பள்ளி எடத்தநாட்டுக்கரா அணியும், நெல்லிப்புழா தருன்னஜாத் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின.
இதில், 4-1 என்ற கோல் கணக்கில், தருன்ன ஜாத் மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்றது.
இரண்டாம் அரையிறுதியில், கஞ்சிக்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி அணியும், மன்னார்காடு எம்.இ.எஸ்., மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. 2-0 என்ற கோல் கணக்கில் எம்.இ.எஸ்., பள்ளி அணி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
எம்.இ.எஸ்., மேல்நிலைப்பள்ளி அணி மற்றும் தருன்னஜாத் மேல்நிலைப் பள்ளி இடையேயான இறுதிப்போட்டி, பரபரப்பாக இருந்தது.
ஆட்ட முடிவில், 4-3 என்ற கோல் கணக்கில் நெல்லிப்புழா தருன்னஜாத் மேல்நிலைப் பள்ளி அணி, கோப்பையை தட்டியது.
முதல் பரிசு வென்ற, தருன்னஜாத் பள்ளி அணிக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பை, இரண்டாம் பரிசு வென்ற எம்.இ.எஸ்., அணிக்கு ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசு வென்ற எடத்தநாட்டுக்கரா அரசு மேல்நிலைப்பள்ளி அணி, நான்காம் இடம் பிடித்த கஞ்சிக்கோடு அரசுப் பள்ளி அணிகளுக்கு கோப்பை வழங்கப்பட்டது.
அதிக கோல் அடித்த, கஞ்சிக்கோடு அணி வீரர் சோபினுக்கு தங்க காலணியும், சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட மண்ணார்காடு அணி வீரர் மிலனிற்கு தங்க பந்தும், சிறந்த கோல் கீப்பரான தருன்னஜாத் பள்ளி அணி வீரர் அர்ஷாத்துக்கு தங்க கையுறையையும், ஏ.ஜே.கே., கல்லுாரி செயலாளர் அஜீத்குமார் லால் மோகன் வழங்கினார். முதல்வர் ராஜூ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.