ADDED : ஏப் 13, 2026 12:51 AM
மேட்டுப்பாளையம்: நேந்திரன், கதளி உள்பட வாழைத்தாரின் விலைகள் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதி நால் ரோட்டில் உள்ள தனியார் வாழைத்தார் ஏல மண்டியில், ஞாயிறு, புதன்கிழமைகளில் ஏலம் நடக்கும். நேற்று காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம், அன்னுார், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் இருந்து, 3,500 வாழைத்தார்களை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். 20க்கு மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றனர்.
ஏலத்தில், ஒரு கிலோ நேந்திரன் அதிகபட்சம் 25 ரூபாய்க்கும், கதளி அதிகபட்சம் 35 ரூபாய்க்கும் ஏலம் போனது. ஒரு தார் பூவன் அதிகபட்சம் 800 ரூபாய்க்கும், ரஸ்தாலி அதிகபட்சம், 700க்கும், தேன் வாழை, 600க்கும், செவ்வாழை 800க்கும், மொந்தன் 150க்கும், ரோபஸ்டா அதிகபட்சம், 250 ரூபாய்க்கும் ஏலம் போனது. கடந்த மாதத்தை விட நேந்திரன், கதளி உள்ளிட்ட அனைத்து வாழைத்தார்களின் விலை குறைந்துள்ளது.
''தடைபட்டுள்ள ஏற்றுமதி மீண்டும் துவங்கும் போது, விலை உயர வாய்ப்புள்ளது,'' என, வாழைத்தார் ஏல மண்டி நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, சின்னராஜ் ஆகியோர் கூறினர்.
