/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பவானி ஆற்றில் புதிய பாலம்! நான்கு வழிப்பாதையுடன் அமைகிறது; பழைய இரும்பு பாலம் இடிக்கப்படும்
/
பவானி ஆற்றில் புதிய பாலம்! நான்கு வழிப்பாதையுடன் அமைகிறது; பழைய இரும்பு பாலம் இடிக்கப்படும்
பவானி ஆற்றில் புதிய பாலம்! நான்கு வழிப்பாதையுடன் அமைகிறது; பழைய இரும்பு பாலம் இடிக்கப்படும்
பவானி ஆற்றில் புதிய பாலம்! நான்கு வழிப்பாதையுடன் அமைகிறது; பழைய இரும்பு பாலம் இடிக்கப்படும்
ADDED : ஜூலை 09, 2025 10:16 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் குறுக்கே, நான்கு வழிச்சாலை கொண்ட, புதிய பாலம் கட்டுவதற்கான நடவடிக்கையை, தேசிய நெடுஞ்சாலை துறை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
கோவை மாவட்டத்தையும், நீலகிரி மாவட்டத்தையும் இணைப்பதற்கு, மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. 100 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், கல் தூண்கள் அமைத்து, அதன் மீது இரும்பு பாலம் அமைத்தனர்.
இப்பாலத்தில் பல இடங்களில் ஓட்டைகள் ஏற்பட்டதால், பாலத்தின் அருகே கான்கிரீட் தூண்கள் அமைத்து, புதிய உயர்மட்ட பாலம் அமைத்தனர். அனைத்து வாகனங்களும் புதிதாக கட்டிய கான்கிரீட் பாலத்தின் வழியாக சென்று வருகின்றன.
கான்கிரீட் பாலத்தின் வழியாக ஊட்டிக்கு, தினமும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், நூற்றுக்கணக்கான வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில் கான்கிரீட் பாலத்தின் இரு பக்கமுள்ள கைப்பிடி சுவர்கள் இடிந்து விழுந்தன. அதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், கான்கிரீட் கலவையால், கைப்பிடி சுவற்றை சரி செய்தனர். இருந்த போதும், பாலம் கட்டி, 40 ஆண்டுகளுக்கு மேலானதால், ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம், மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களை இணைக்கும் ஒரே பாலம், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப் பாலம். இப் பாலத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால், இரண்டு மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டித்து விடும். அதனால் மற்றொரு புதிய பாலம் கட்ட வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் குறுக்கே, தற்போதுள்ள கல்தூண் இரும்பு பாலம் முற்றிலும் அகற்றப்படும். அந்த இடத்தில் புதிதாக பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு உள்ளது.
பாலத்தின் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நான்கு வழி பாதை கொண்ட பாலம் கட்டப்படும். தொலைநோக்கு பார்வையுடன் புதிய பாலம் கட்ட, திட்ட மதிப்பீடு தயார் செய்து, மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.
அனுமதியும் நிதி ஒதுக்கீடும் கிடைத்தவுடன், உடனடியாக பவானி ஆற்றின் குறுக்கே, புதிய உயர் மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.