/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அபாயம் புதிய வடிவங்களில் சாக்லேட்
/
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அபாயம் புதிய வடிவங்களில் சாக்லேட்
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அபாயம் புதிய வடிவங்களில் சாக்லேட்
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அபாயம் புதிய வடிவங்களில் சாக்லேட்
UPDATED : பிப் 22, 2026 06:41 AM
ADDED : பிப் 22, 2026 06:39 AM

கோவை: பெரிய கடைகள், தயாரிப்பு நிறுவனங்களை தொடர்ந்து கண்காணிக்கும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், சிறுமளிகை கடைகளிலும், உணவகங்களிலும் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டியது அவசியம். சமீபகாலங்களில் புதுப்புது வடிவங்களில் தரமற்றகுழந்தைகளுக்கான சாக்லேட் இதுபோன்ற மளிகை கடைகளில் விற்பனையாகின்றன.
சிரிஞ்ச் போன்று இந்த சாக்லேட் விற்பனை செய்யப்படுகிறது. அதுவும், 5 ரூபாய் என்பதால் குழந்தைகள் பலர் அதை விரும்பி வாங்கிச்செல்வதை காணமுடிகிறது. இதில், தயாரிப்பு, காலாவதி தேதி இருப்பதில்லை.தயாரிப்பு நிறுவனம் மும்பை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் உள்ள தயாரிப்பு மூலப்பொருட்களை ஆய்வு செய்த போது உண்மையான சாக்லேட் மூலப்பொருட்கள் அதில் கலக்கப்படவில்லை. சர்க்கரை, சின்தடிக் சர்க்கரை, ஹைட்ரஜன் ஏற்றப்பட்ட தாவர எண்ணெய், விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க 'பிரசர்வேட்டிவ்' ஆகியவை மட்டுமே வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஐந்து ரூபாய்க்கு விற்கப்படும் இந்த ஊசி வடிவத்தில் உள்ள பிளாஸ்டிக் உணவு தரத்திற்கு ஏற்றதா என்பதும் கேள்விக்குறியே. பெற்றோர் குழந்தைகளுக்கு இதுபோன்ற தரமற்ற சாக்லேட், பாக்கெட் சிப்ஸ் வாங்கித்தருவதை தவிர்க்க வேண்டும்.
ஆசிரியர் உஷா கூறுகையில், ''பள்ளிக்குழந்தைகள் சிலர் ஊசி வடிவத்தில் சாக்லேட் வைத்து இருந்தனர். அதை வாங்கி வெள்ளை நிற தாளில் ஊற்றி பார்த்த போது எண்ணெய் கசியத்துவங்கியது. சிறிது நேரத்தில் அதிலுள்ள சாக்லேட் பிரவுன் நிறம் மாறி வெள்ளையாக இருந்தது. வெறும் சர்க்கரை, எண்ணெய் தவிர அதில் ஒன்றும் இல்லை. வடமாநிலங்களில் இருந்து இதுபோன்ற குறைந்த விலை சாக்லேட் விற்பனைக்கு வருகிறது. பெற்றோர் தவிர்ப்பது அவசியம், '' என்றார்.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதாவிடம் கேட்டபோது, '' மளிகை கடைகளிலும் தொடர்ந்து ஆய்வு நடத்துகிறோம். குழந்தைகளை ஈர்க்க புதிய வடிவங்கள், நிறங்களை பல தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பெற்றோர் கவனித்து வாங்க வேண்டும். இதுபோன்று தரமில்லாத பொருட்கள் எதுவானாலும் 94440-42322 என்ற வாட்ஸ் அப் எண் அல்லது உணவு பாதுகாப்புத்துறை செயலியில் புகார் அளியுங்கள். உடனடியாக மாதிரிகள் எடுத்து, தவறுகள் இருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

