/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீலம்பூரில் ரூ 4.88 கோடி செலவில் புதிய போலீஸ் ஸ்டேஷன் தினமலர் செய்தி எதிரொலி
/
நீலம்பூரில் ரூ 4.88 கோடி செலவில் புதிய போலீஸ் ஸ்டேஷன் தினமலர் செய்தி எதிரொலி
நீலம்பூரில் ரூ 4.88 கோடி செலவில் புதிய போலீஸ் ஸ்டேஷன் தினமலர் செய்தி எதிரொலி
நீலம்பூரில் ரூ 4.88 கோடி செலவில் புதிய போலீஸ் ஸ்டேஷன் தினமலர் செய்தி எதிரொலி
ADDED : ஏப் 29, 2025 11:32 PM
சூலுார், ; நீலம்பூரில், ரூ.4.88 கோடி செலவில் புதிய போலீஸ் ஸ்டேஷன் உருவாக்கப்படும், என்ற அறிவிப்பால், சுற்றுவட்டார மக்களும், போலீசாரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சூலுார் வட்டாரத்துக்கு உட்பட்ட அவிநாசி ரோட்டை ஒட்டி, நீலம்பூர், கரையாம்பாளையம், மயிலம் பட்டி, முதலிபாளையம், அரசூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. தினம்தோறும் புதிய தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலைக்காக இப்பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.
மேலும், ஐ.டி., நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லுாரிகள் பல உள்ளன. எல் அண்ட் டி பை - பாஸ் ரோடு நீலம்பூர் வழியாக செல்கிறது. நீலம்பூர், மயிலம் பட்டி ஊராட்சிகள், கோவை மாநகராட்சியுடன் இணைக்கப் பட்டுள்ளன. நீலம்பூரில் தான் மெட்ரோ ரயில்வே பணிமணையும், விரிவாக்கம் செய்யப்பட உள்ள, கோவை சர்வதேச விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில் மற்றும் கார்கோ நுழைவாயிலும் நீலம்பூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளன.
வளர்ந்து வரும் பகுதியாக மாறியுள்ள இந்த ஊர்களில் குற்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க, 12 கி.மீ., தொலைவில் உள்ள சூலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டி உள்ளது. பொதுமக்கள் எளிதில் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல முடியாத நிலையிலும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத நிலையிலும் இருந்து வருகின்றனர். நீலம்பூர் பகுதியில் புதிய ஸ்டேஷன் துவக்க வேண்டும், என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வந்தது. திட்ட வரைவு தயாரித்து அனுப்பி, ஐந்து ஆண்டுகள் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இதுகுறித்த செய்தி நமது தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், நேற்று சட்டசபையில் போலீஸ் மானிய கோரிக்கை அறிவிப்பில், நீலம்பூரில், 4 கோடியே, 88 லட்சம் ரூபாய் செலவில், புதிய போலீஸ் ஸ்டேஷன் உருவாக்கப்படும், என, முதல்வர் அறிவித்தார். அறிவிப்பு வெளியானதால், சுற்றுவட்டார பொதுமக்களும், போலீசாரும்மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

