ADDED : ஜூன் 05, 2025 01:03 AM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலயத்தில், புதிய பாதிரியார் பொறுப்பேற்கும் விழா நடந்தது.
மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலய பங்கு பாதிரியாராக, கடந்த ஐந்து ஆண்டுகளாக பணியாற்றியவர் ஹென்றி லாரன்ஸ். இவர் திருப்பூர் குமார் நகரில் உள்ள சூசையப்பர் ஆலயத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, குமார் நகரில் உள்ள புனித சூசையப்பர் ஆலய பங்கு பாதிரியார் பிலிப், மேட்டுப்பாளையம் அந்தோணியார் ஆலய பங்கிற்கு மாற்றப்பட்டார்.
புதிய பாதிரியார் பொறுப்பேற்கும் சிறப்பு திருப்பலி புனித அந்தோணியார் ஆலயத்தில் நடந்தது. கோவை மறை மாவட்ட பொருளாளர் பாதிரியார் செல்வராஜ் தலைமை வகித்து, திருப்பலியை துவக்கி வைத்து, ஆலயத்தின் சாவியை, பாதிரியார் பிலிப்பிடம் வழங்கினார். அதைத்தொடர்ந்து புதிய பங்கு பாதிரியார் திருப்பலியை நிறைவேற்றினார்.
இதில் முன்னாள் பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ், பாதிரியார்கள் ஞானபிரகாசம், மரிய சுந்தரம், சிஜு, திருத்தொண்டர் மிக்கேல் அதிதூதர் ஆகியோர் பங்கேற்று, திருப்பலியை நிறைவேற்றினர். இவ்விழாவில் திருப்பூர் குமார் நகர் புனித சூசையப்பர் ஆலய பங்கு மக்கள், மேட்டுப்பாளையம் அந்தோணியார் ஆலய பங்கு மக்கள் பங்கேற்றனர். முடிவில் புதிய பாதிரியாருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.