ADDED : மே 20, 2025 11:35 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே புதிய சிறை வளாகம், 327 கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
கோவையில் உள்ள மத்திய சிறை வளாகம் கடந்த, 1872ம் ஆண்டு கட்டப்பட்டது. 167 ஏக்கர் பரப்பில், 2208 கைதிகள் தங்கும் அறையுடன் இந்த சிறை வளாகம் உள்ளது.
பல்வேறு காலகட்டங்களில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் உள்ளிட்ட பலர் இதில் அடைக்கப்பட்டு இருந்தனர். தற்போது, சிறை வளாகத்தை சுற்றி உள்ள பகுதிகளில் செம்மொழி பூங்கா கட்டுமான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
நெருக்கடியான சூழலில் உள்ள கோவை மத்திய சிறை வளாகத்துக்கு பதிலாக, பெரிநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிளிச்சி ஊராட்சி, ஒன்னிபாளையம் செல்லும் வழியில் புதிய சிறை வளாகம் கட்ட, நேற்று முன்தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளியில் அடிக்கல் நாட்டினார். உடனடியாக பணிகள் துவக்கப்பட்டுள்ளன. கோவை மேட்டுப்பாளையம் ரோடு, கோட்டை பிரிவில் இருந்து ஒன்னிபாளையம் செல்லும் ரோட்டில், 3 கி.மீ.,தொலைவில் பூமிதான இயக்கம் சார்பில் பெறப்பட்ட, 89.27 ஏக்கர் நிலத்தில் புதிய சிறை வளாகம் கட்டப்பட உள்ளது. இந்த புதிய சிறை வளாகம், 3,500 கைதிகள் தங்கும் வகையில் கட்டமைக்கப்பட உள்ளது. சிறை கைதிகள் மற்றும் ஊழியர்கள் இரு தரப்பினரும் பாதுகாப்பான சூழலில் தங்கும் வகையில் விசாலமான இடத்தில் கட்டடம் அமைக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் உடன் கூடிய சிறை வளாகமாக இது அமையும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில், முதல் கட்டமாக ஆண், பெண் சிறை வளாகம், பொதுப்பகுதிகள், 111 பணியாளர்கள் தங்கும் வகையில் குடியிருப்பு மற்றும் பாதுகாப்பு சுற்றுச்சுவர் ஆகியவை கட்டப்படுகின்றன. இரண்டாம் கட்டமாக ஆண்கள், பெண்களுக்கான சிறப்பு சிறை வளாகம் கட்டப்பட உள்ளது.
பணிகள் மூன்று கட்டங்களாக பிரித்து கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு போலீஸ் கார்ப்பரேஷன் சார்பில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறை வளாக கட்டுமான பணி, 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.