/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனித - வனவிலங்கு மோதலை தடுக்க புதிய திட்டம்!ரூ.3 கோடி செலவில் பணிகள் தீவிரம்
/
மனித - வனவிலங்கு மோதலை தடுக்க புதிய திட்டம்!ரூ.3 கோடி செலவில் பணிகள் தீவிரம்
மனித - வனவிலங்கு மோதலை தடுக்க புதிய திட்டம்!ரூ.3 கோடி செலவில் பணிகள் தீவிரம்
மனித - வனவிலங்கு மோதலை தடுக்க புதிய திட்டம்!ரூ.3 கோடி செலவில் பணிகள் தீவிரம்
ADDED : ஜூன் 17, 2024 11:15 PM

வால்பாறை;வால்பாறையில், மனித, வனவிலங்குகள் மோதலை தடுக்க, 2.995 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் விர்ச்சுவல் பென்சிங் சிஸ்டம்' நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி வனக்கோட்டத்தில், பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகங்கள் உள்ளன. இதில், வால்பாறை, மானாம்பள்ளியில், மனித - வனவிலங்குகள் மோதல் அவ்வப்போது நடக்கிறது.
வனவிலங்குகள் தாக்கி, தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன.
இரவு நேரங்களில், வெளியேறும் வனவிலங்குகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சப்படும் சூழல் உள்ளது. இதை தடுக்க, வனத்துறை வாயிலாக கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரக பகுதியில், 'ஸ்மார்ட் விர்ச்சுவல் பென்சிங் சிஸ்டம்' நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரக பகுதியில், தமிழ்நாடு புதுமையான கண்டுபிடிப்புகள் திட்டத்தின் கீழ் (தமிழ்நாடு இன்னோவேட்டிவ் இன்னோவேஷன்ஸ்) 2.995 கோடி ரூபாய் நிதியில், ஸ்மார்ட் விர்ச்சுவல் பென்சிங் சிஸ்டம் நிறுவப்படுகிறது.
வால்பாறையில், 700; மானாம்பள்ளியில், 600, என மொத்தம், 1,300 இடங்களில் இந்த சிஸ்டம் நிறுவப்படுகிறது.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஸ்மார்ட் விர்ச்சுவல் பென்சிங் சிஸ்டம் என்பது, சூரிய சக்தியில் இயங்க கூடிய சாதனமாகும். மனித வசிப்பிடங்களுக்குள் நுழைய முயற்சிக்கும் எந்த விலங்குகளின் ஊடுருவலையும் கண்டறிய அகச்சிவப்பு சென்சார்களை பயன்படுத்துகிறது.
ஊடுருவலை கண்டறிந்த பின் ஒரு எச்சரிக்கை துாண்டுகிறது. அது நெருங்கி வரும் விலங்குகளை விரட்டுகிறது. அலாரம் அமைப்பு, விலங்குகளின் பழக்கத்தை தாமதப்படுத்த ஒலி மற்றும் ஒளியின் தனித்துவமான சேர்க்கைகளை வெளிப்படுத்துகிறது. இந்த சாதனம், ஜி.எஸ்.எம்., யூனிட்டுடன் வருகிறது. இது வனவிலங்குகள் - மனித மோதலை தடுக்கும் வகையில் அமைக்கப்படுகிறது,' என்றனர்.
வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் கூறுகையில், ''வால்பாறையில், மனித - வனவிலங்குகள் மோதலை தடுக்கும் வகையில், ஸ்மார்ட் விர்ச்சுவல் பென்சிங் சிஸ்டம் அமைக்கப்படுகிறது. அதில், தொழிலாளர்கள் குடியிருப்பு, ரேஷன் கடைகள் நுழைவு பகுதியில் இந்த சாதனம் நிறுவப்படுகிறது.
24 மணி நேரமும் இயங்க கூடிய வகையில் இந்த சாதனம் உள்ளது. எனினும், இரவு நேரங்களில் தான் அதிகம் தேவைப்படுகிறது. மாலை, 6:00 மணி முதல் அடுத்த நாள் காலை, 6:00 மணி வரை (12 மணி நேரம்) இந்த சிஸ்டம் இயங்கும் வகையில் நிறுவப்படுகிறது. மாலை, 6:00மணிக்கு தானாகவே சிஸ்டம் இயங்க துவங்கிவிடும்.
இதில் இருந்து, ஒளி மற்றும் ஒலி வருவதால் வன விலங்குகளிடம் இருந்து மனிதர்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும். ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்ட இந்த சாதனத்தில் இருந்து வரும் சப்தத்தால், காட்டு மாடுகள் போன்றவை திரும்பிச் செல்கின்றன.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் யானைகள் தொடர்ந்து ஊடுருவது போன்ற அவசர காலங்களில், அதிகாரிகள் செயல்படுத்துவதற்கும், பிரச்னைகளுக்கும் உடனடியாக தீர்வு காண்பதற்கும், இது நிகழ்நேர தரவுகளை வழங்க கூடியதாக உள்ளது. தற்போது, இவை அனைத்து பகுதியிலும் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.