ADDED : ஜூலை 16, 2025 10:26 PM
மேட்டுப்பாளையம்; கட்டி முடித்து ஆறு மாதங்களாக திறக்காமல் இருந்த, புதிய ரேஷன் கடை நேற்று திறக்கப்பட்டது.
காரமடை ஊராட்சி ஒன்றியம் புளு ஹில்ஸ் அவென்யூ, இனியா நகர், ஐஸ்வர்யா நகர், குறிஞ்சி நகர் உட்பட 10 குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும் என, கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கடந்த ஜனவரி மாதம் குறிஞ்சி நகரில், புதிதாக ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டது. கடந்த ஆறு மாதங்களாக ரேஷன் கடை திறக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து தினமலரில் போட்டோவுடன் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது.
ஜடையம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் பழனிசாமி, ரிப்பன் வெட்டி புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர் கல்யாண சுந்தரம் விற்பனையை துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் குறிஞ்சி நகர் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ரேஷன் கடை சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் பகுதிநேர ரேஷன் கடையாக செயல்படும்.