ADDED : மார் 26, 2026 04:41 PM
உலகை ஆளப்போகும் புதிய பொறியியல் படிப்புகளில், ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் அண்ட் மிஷின் லேர்னிங், இண்டர்நெட் ஆப் திங்க்ஸ், சைபர் செக்யூரிட்டி, ரோபாட்டிக்ஸ் ஆட்டோமேஷன், குவாண்டம் கம்ப்யூட்டிங், கிளவுடு கம்ப்யூட்டிங், 3டி பிரின்டிங் ஆகியவை மிக முக்கியமானவை.
இந்த எதிர்கால தொழில் நுட்பங்களைச் சார்ந்த பொறியியல் பிரிவுகளை தேர்ந்தெடுத்து எதிர்காலத்தை பிரகாசப்படுத்திக் கொள்ளலாம். ஒரு காலத்தில் நோய் கண்டறிவது என்பது சவாலான காரியம். நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு செல்வர்.
இன்றைக்கு அப்படி இல்லை. 'ஹெல்த் கேர்' துறையிலும் ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன்படி, முன்கூட்டியே நோய் அறிகுறிகளை கண்டறிய முடியும்.
'மார்க்கெட்டிங்' துறையிலும் ஆர்ட்டிபிஷியல் இன்டிலிஜென்ஸ் முக்கிய இடத்தினை பிடித்துள்ளது. பிளிப்கார்ட் அல்லது அமேசானில் ஒரு மொபைல் போனை தேடினாலே போதும், அடுத்த சில நிமிடங்களின் உங்களுடைய தேடுதல் எண்ணங்களை நாடி பிடித்து பார்த்து, அதேபோன்ற பொருட்கள் உங்களின் பார்வைக்கு வரிசையாக வந்து கொண்டு இருக்கும். அந்த அளவிற்கு இத்துறையில் ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் தாக்கம் உள்ளது.
கம்ப்யூட்டர் டேட்டாபேஸில் தகவல்களை மனிதன் பதிந்தகாலம் போய் மிஷின்களே நேரடியாக டேட்டாவை பதிந்துவிடுகின்றன. அதிலும், மெஷினும் மெஷினும் பேசிக்கொள்கின்ற காலகட்டத்திற்குள் நாம் வந்துவிட்டோம். இது தான் இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் புதிய தொழில்நுட்பத்தின் அழகு.
நீங்கள் எங்கு போய் இருந்தாலும் கூட உங்கள் வீடு, அலுவலகத்தை கண்காணிக்க முடியும். அதுவும் மொபைல் வழியாக கண்காணித்துவிட முடியும். அந்த அளவிற்கு 'இன்டர்நெட் ஆப் திங்க்ஸ்' இன்றைக்கு பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற உலகினை மாற்றக்கூடிய புதிய தொழில்நுட்ப படிப்புகளை முழு கவனத்துடன் படித்தால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
