தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை இலக்கியம்

கோவை இலக்கியம்

கோவை இலக்கியம்


ADDED : பிப் 11, 2016 09:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2016 09:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

'கவிதைக்கு யதார்த்தம் பேச்சுக்கு நகைச்சுவை'கோவை: குனியமுத்துார், கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் தமிழ் மன்றம் சார்பில் படைப்பிலக்கிய பயிலரங்கம், பேச்சு மற்றும் கவிதைப்போட்டி கல்லுாரி வளாகத்தில் நடந்தது.பட்டிமன்ற பேச்சாளர் சண்முகவடிவேல் பங்கேற்று பேசியதாவது:ஒருவர் பேசும் சொற்களும், எழுதும் எழுத்துக்களுமே ஒருவரின் திறமையை வெளிப்படுத்தும். குறுங்கதைகளை விளையாட்டாக கல்லுாரியில் எழுதியவர்கள்தான், இன்றைய புகழ்பெற்ற தமிழ் பண்டிதர்களும், பேச்சாளர்களும். எழுத்தாற்றலை வளர்த்தால் புகழ்பெற்ற எழுத்தாளர்களாக உருவாகலாம். பேச்சாளர்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளையும், கவிதை எழுதுபவர்கள், கவிநயத்தையும், யதார்த்தத்தையும் கடைப்பிடித்தல் அவசியம். பேச்சில் நகைச்சுவை என்பது மிகப் பெரிய ஆயுதம். நகைச்சுவை வாயிலாக ஆழ்ந்த கருத்துக்களை கூறி, கேட்பவர்களை கவனிக்கச் செய்யலாம். இவ்வாறு அவர் பேசினார்.தமிழக அளவில் பல்வேறு கல்லுாரிகளிலிருந்தும் மாணவர்கள் திரளாக பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பொள்ளாச்சி, சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்று கிருஷ்ணா சுழற்கோப்பையை வென்றனர்.

கவிதை, சிறுகதை பயிலரங்கம்கோவை : சரவணம்பட்டி எஸ்.என்.எஸ்.ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை சார்பில், தமிழ் மன்ற விழா நடந்தது. மாணவர்களின் படைப்பிலக்கிய திறனை வளர்க்கும் நோக்கில் படைப்பிலக்கிய பயிலரங்கம் நடத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி தாளாளர் ராஜலட்சுமி தலைமை வகித்தார், கல்லுாரி முதல்வர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் கிருபாகரன் பங்கேற்று, புதுக்கவிதை மற்றும் சிறுகதைகள் எழுதுவது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.இன்றைய படைப்பிலக்கிய போக்குகள் மற்றும் தமிழ் இலக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து, விளக்கப்பட்டது. மாணவர்கள் எழுதிய படைப்புகள் அடங்கிய 'ஏணிப்படிகள்' என்ற இதழ் வெளியிடப்பட்டது.

'கண்ணதாசன் கவிதையும், பாடலும் காலத்தை வென்று நிற்கின்றன'கோவை : ''கவிதைக்கும், சினிமா பாடலுக்கு வித்தியாசம் இல்லாமல் இலக்கிய தரமான பாடல்களை எழுதியவர் கண்ணதாசன்,'' என, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லுாரி டீன் டாக்டர் மீனாட்சிசுந்தரம் பேசினார். கோவை நகரத்தார் சங்கம் சார்பில், கவிஞர் கண்ணதாசன் விழா நடந்தது. சங்கத்தலைவர் அண்ணாமலை வரவேற்றார். தலைமை வகித்த திருவாரூர் அரசு மருத்துவக்கல்லுாரி டீன் டாக்டர் மீனாட்சிசுந்தரம் பேசியதாவது:கவிஞர் கண்ணதாசனின் சினிமா பாடல்களை கேட்டு பாராட்டுபவர்கள்தான் அதிகம். அவரது கவிதைகளை படித்தவர்கள் குறைவு. எனக்கு அவரது கவிதைகளில்தான் ஈடுபாடு அதிகம். அவரது அத்தனை கவிதைகளும் மனப்பாடமாக தெரியும்.கண்ணதாசனின் பல கவிதைகள் இசை அமைக்கப்பட்டு சினிமா பாடல்களாக வெளி வந்துள்ளன. 'பாகப்பிரிவினை' படத்தில் இடம்பெற்ற 'தழையாம் பூ முடிந்து, தடம் பார்த்து நடை நடந்து' என்ற பாடல் அவர் மெட்டுக்கு எழுதிய பாடல் அல்ல; தன் மனைவியை பற்றி அவர் எழுதிய கவிதை அது.கவிதைக்கும், சினிமா பாடலுக்கு வித்தியாசம் இல்லாமல் இலக்கிய தரமான பாடல்களை எழுதியவர் கண்ணதாசன் மட்டும்தான். தத்துவம், ஆன்மிகம், பொதுவுடமை, காதல் என, நவரசங்களும் அவரது பாடல்களில் இருந்தன.உவமை, உருவகம், உத்தி, அழகியல் மற்றும் சந்தநயம் அவரது கவிதைகளில் இருந்தன. அதனால் தான் கண்ணதாசனின் கவிதையும், பாடலும் காலத்தை வென்று மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றன. இவ்வாறு, மீனட்சிசுந்தரம் பேசினார். கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன், கவிஞர் உமாகேஸ்வரி, சங்க நிர்வாகிகள் கருப்பையா, விஸ்வநாதன், சிதம்பரம், சுப்ரமணியன், மயிலேறு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

'புத்தக வாசிப்பால் மனம் விசாலமாகும்'அன்னுார்: 'அன்னுார் அறக்கட்டளை' சார்பில், விருது வழங்கும் விழா நடந்தது.அன்னுார் அறக்கட்டளை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சொற்பொழிவு நடக்கிறது. இந்த ஆண்டு விழாவில், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இதில் தமிழ் சேவை புரிந்தோருக்கான விருது, தமிழ் சிற்றிதழ்கள் சங்க தலைவர் புலவர் ரவீந்திரனுக்கு, சேவா சங்க தலைவர் தேவராஜன் வழங்கினார்.விருது பெற்ற புலவர் ரவீந்திரன் ஏற்புரையில் பேசியதாவது:தமிழ் இலக்கியம், 2,000 ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்டது. மனித வாழ்வின் பல்வேறு கூறுகளை இலக்கியங்கள் நமக்கு எடுத்து சொல்கின்றன. சங்க காலத்தில், சங்க இலக்கியம், நீதி இலக்கியங்கள் மேலோங்கி இருந்தன.இடைக்காலத்தில், பக்தி, காப்பியம், உரை நுால்கள், புராணங்கள் அதிகமாக இருந்தன. 20ம் நுாற்றாண்டில், கட்டுரை, சிறுகதை, கவிதை, ஆராய்ச்சிக் கட்டுரைகள் அதிகமாக உள்ளன.ஒரு வாசக சாலை திறக்கப்பட்டால், ஒரு சிறைச்சாலை மூடப்படும் என்பது பிரசித்தி பெற்ற வாசகம். புத்தக வாசிப்பால், மனம் விசாலமாகும். பல சமுதாய புரட்சிகளுக்கு எழுத்துக்கள் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. எழுத்து வாசிப்பவனை சிந்தித்து, செயல்பட வைக்க வேண்டும்.இவ்வாறு புலவர் ரவீந்திரன் பேசினார்.தமிழ்ச் சங்க செயலர் அன்னாசிக்குட்டி வாழ்த்தி பேசினார். கவிஞர் அய்யாசாமி குழுவின் இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us