/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எழுத்து என்பது ஆடம்பரமானது பேச்சே எல்லோரையும் சேர்கிறது! பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பேட்டி
/
எழுத்து என்பது ஆடம்பரமானது பேச்சே எல்லோரையும் சேர்கிறது! பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பேட்டி
எழுத்து என்பது ஆடம்பரமானது பேச்சே எல்லோரையும் சேர்கிறது! பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பேட்டி
எழுத்து என்பது ஆடம்பரமானது பேச்சே எல்லோரையும் சேர்கிறது! பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பேட்டி
ADDED : பிப் 05, 2017 12:06 AM
நவீன கல்வி, சமூகம் சார்ந்த சிந்தனை, பெண்ணியம் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, தனது சொற்பொழிவுகள் மூலம், மிக ஆழமான கருத்துக்களை விதைத்து வருபவர் பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன். தேச நலனுக்காக அறிவாற்றலும், தன்னம்பிக்கையும் உள்ள இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்போடு செயல்பட்டு வருபவர்.
இவர் சமீபத்தில், இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று சொற்பொழிவு மற்றும் பயிலரங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்று திரும்பியுள்ளார். அவர் தனது பயண அனுபவம் குறித்து, நமது நிருபரிடம் பகிர்ந்தவை...
சமீபத்தில் இலங்கை சென்று இருந்த நீங்கள், அங்கு என்னென்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்றீர்கள்?இலங்கையில் உள்ள இந்திய துாதரகம் சார்பில், காந்தி ஜெயந்தி விழா நடந்தது. அதில் பேச என்னை அழைத்திருந்தனர். அத்துடன், அங்கு வாழும் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பேசினேன்.
அங்குள்ள தமிழ் மக்களிடம் தற்போது இலக்கிய சூழல் எப்படி இருக்கிறது, அங்குள்ள எழுத்தாளர்களை சந்தித்தீர்களா ?இன்றைக்கு இலக்கியம் பாராட்டி கொண்டாடும் சூழ்நிலையில் அங்கு மக்கள் இல்லை. போர்க்கால பாதிப்பு, அதன் இழப்புகள் குறித்து வேதனையோடு இருக்கின்றனர். அது குறித்து எழுதப்பட்ட நுால்கள் இருக்கின்றன. கடந்த கால நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள், அங்கேயே தங்கி இருந்து, மக்கள் அனுபவங்களை நுால்களாக எழுதி வருகின்றனர்.
ஆனால், அங்கே இருக்கும் தமிழர்கள் இலக்கியம் படைக்கும் மனநிலையில் இல்லை. எல்லாம் இழந்து ஏதுமற்றவர்களாக வாழ்கின்றனர். அவர்களின் நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே கேள்விக்குரியதாகவே இருக்கிறது.
யாழ் நுாலகம் போய் இருந்தீர்களா?ஆம்... போய் இருந்தேன். அந்த நுாலகம் முன்பு எப்படி இருந்தது என்று எனக்கு தெரியாது. ஆனால் இப்போது அதை புதுப்பித்துள்ளனர். நான் ஷாப்னாவில் இருந்து 30 கி.மீ. துாரத்தில் இனுவில் என்ற இடத்தில் மிகப்பழமையான நுாலகம் உள்ளது. அது போரால் பாதிக்கப்பட்டு சிதைந்து இருந்தது. அது இப்போது புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று நான் பேசினேன்.
அங்குள்ள தமிழர்கள் அதை அவர்கள் தங்களின் சொந்த செலவில் நிறுவி நடத்தி வருகின்றனர். யாழ் நுாலகம் போல் இதுவும் ஒரு முக்கியமான நுாலகமாகும்.
இறுதிப்போர் நடந்த முள்ளி வாய்க்கால் பகுதிக்கு போய் இருந்தீர்களா?அங்கும் சென்றிருந்தேன்... ஆனால், அங்கு இறங்கி எதையும் பார்க்கும் அளவுக்கு மன தைரியம் எனக்கு இல்லை. என்னால் கண்ணீர் மட்டும்தான் சிந்த முடிந்தது. அந்த நிலத்தில் படிந்து இருக்கும் மயான அமைதியும், கனமான சோகமும் என்னை பெரிதும் கலங்க வைத்து விட்டன.மலேசியா தமிழர்களின் வாழ்க்கை சூழல் மற்றும் இலக்கிய போக்குகள் எப்படி இருக்கின்றன...மலேசியாவில் இலக்கிய சூழல் நன்றாக இருக்கிறது. நான் இலக்கிய கூட்டத்துக்காக செல்லவில்லை. சமூகம் மற்றும் கல்வி சார்ந்த அமைப்புகளின் அழைப்பில்தான் சென்று இருந்தேன். அதனால், இலக்கியம்குறித்து நான் அங்கு எதுவும் பேசவில்லை. பொதுவாக, சிங்கப்பூர் தமிழர்களுக்கும், மலேசிய தமிழர்களுக்கும் வாழ்க்கை சூழ்நிலைகளில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
சிங்கப்பூரை பொறுத்தவரை தமிழர்களுக்கு எல்லாம் சம அளவில் இருக்கின்றன. ஆனால், மலேசியாவில் அப்படி இல்லை. எல்லாவற்றிலும் மலேசியர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், அங்கு மத மாற்றம் என்பது பெரும் பிரச்னையாக இருக்கிறது.
எத்தனை நுால்கள் எழுதி இருக்கிறீர்கள்?மூன்று நுால்கள் எழுதி இருக்கிறேன். அதில் இரண்டு மொழிபெயர்ப்பு நுால்கள். எனக்கு எழுத்தில் ஆர்வம் இல்லை. என்னை பொறுத்தவரை, எழுத்து என்பது ஆடம்பரமானது, அது அத்தியாவசியமில்லை. எழுத்து வடிவம் எழுதப்படிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் போய் சேர்கிறது. பேச்சு வடிவம் அப்படி இல்லை, எல்லோருக்கும் போய்ச்சேர்கிறது. எழுத்தில் இல்லாத பல விஷயம் பேச்சில் இருக்கிறது. அதனால்தான் 'கற்றலில் கேட்டல் நன்று' என்று சொன்னார்கள். நான் எழுத்தை விட பேச்சுக்குதான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.