தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரயில்வே அமைச்சர் காண்பித்தார் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 'பச்சைக்கொடி!' பத்தாண்டு ஏக்கம் நிறைவேறுகிறது

ரயில்வே அமைச்சர் காண்பித்தார் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 'பச்சைக்கொடி!' பத்தாண்டு ஏக்கம் நிறைவேறுகிறது

ரயில்வே அமைச்சர் காண்பித்தார் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 'பச்சைக்கொடி!' பத்தாண்டு ஏக்கம் நிறைவேறுகிறது


ADDED : ஜூலை 03, 2017 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2017 01:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை : கோவைக்கு 'மோனோ' ரயில் திட்டம்தான் என்ற, மாநில அரசின் பிடிவாத அறிவிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் முயற்சியால்,'மெட்ரோ' ரயில் திட்டத்தை, கோவையில் செயல்படுத்துவதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிய ஆரம்பித்துள்ளன. நேற்று கோவைக்கு வந்த ரயில்வே அமைச்சர், இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

கோவை மாவட்டத்தில், 30 லட்சம் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் உள்ளன. இவற்றில், 20 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள், அன்றாடம் கோவை நகரில் வலம் வருகின்றன. இந்நகருக்கென்று முழுமையான, அரை வட்ட, புறவழிச்சாலை இல்லை. ஒரு சில திட்டச்சாலைகளும், இணைப்பு சாலைகளும் மட்டுமே உள்ளன. பல அடுக்கு மேம்பாலங்களை போன்ற கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், நகருக்குள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் நொந்து போகின்றனர்.இதனால் காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படுவதோடு, வாகன விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. இச்சூழலில், ஆண்டுக்கு ஒன்று முதல் ஒன்றரை லட்சம் வாகனங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் புதியதாக பதிவு செய்யப்படுகின்றன. இதே நிலை நீடித்தால், இன்னும் ஐந்து ஆண்டுகளில், கோவை நகருக்குள் வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு, போக்குவரத்து பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது

தீர்வு தரும் மெட்ரோ ரயில்!நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும், மக்கள் போக்குவரத்தை மேம்படுத்தவும், 'மெட்ரோ' ரயில் திட்டம் கொண்டு வர வேண்டும் என, கோவையிலுள்ள தொழில் அமைப்புகளும், சமூக பொதுநல அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.நகரங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நாடு முழுக்க, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த, பத்தாண்டுகளுக்கு முன் முடிவு செய்யப்பட்டது. அதற்கு தகுதியான, 19 நகரங்களில் ஒன்றாக, கோவையை மத்திய நகர்ப்புற அமைச்சகம் தேர்வு செய்தது. அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பங்களிப்பை வழங்கவும் ஒப்புதல் அளித்தது.திட்டத்தை நிறைவேற்ற, நில ஆர்ஜிதம் உள்ளிட்ட ஆயத்தப்பணிகளை செய்து தர வேண்டிய பொறுப்பு, தமிழக அரசுக்கு உள்ளது. நில அமைப்பு, மக்கள் தொகை, பரப்பு, வாகன பெருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், கோவைக்கு 'மெட்ரோ' ரயில் திட்டமே சிறந்தது என்பதால், அதை நிறைவேற்ற வேண்டும் என்று கோவை மக்கள் விரும்புகின்றனர்.அதற்கேற்றாற் போல், கோவை நகரை வலம் வந்து ஆய்வு செய்த, 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன், கோவை நகருக்கு மெட்ரோ ரயில் திட்டமே சிறந்தது என்று கூறினார். ஆனால், கோவைக்கு 'மோனோ' ரயில் திட்டம்தான் கொண்டு வரப்படும் என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 'மெட்ரோ' ரயில் திட்டம் வரும் என, காத்திருந்த அனைவருக்கும், இது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.கோவையை விட சிறிய நகரமான, கேரள மாநிலம் கொச்சியில், சமீபத்தில் பிரதமர் மோடி, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கைய்யாநாயுடு ஆகியோர், 'மெட்ரோ' ரயில் சேவையை துவக்கி வைத்தனர்.ஆனால், 'தொழில் நகரமான கோவைக்கு, மெட்ரோ ரயில் திட்டமே அவசியம்; 'மோனோ' ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று நேற்று கோவை வந்த, ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம், கோவை யிலுள்ள முக்கிய பிரமுகர்கள் வலியுறுத்தினர்.அதற்கு பதிலளித்த அமைச்சர் சுரேஷ்பிரபு, ''மத்திய, மாநில அரசுகளின் 50:50 சதவீத பங்களிப்பில், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன்வந்து நிதி ஒதுக்கீடு செய்தது. மாநில அரசு அதற்கு முக்கியத்துவம் கொடுக்காததால், அத்திட்டம் நிறைவேறவில்லை.'மெட்ரோ ரயில்' திட்டத்தை முடிவு செய்வது, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம். அத்துறை முடிவு செய்தால், நாங்கள் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர, இப்போதும் தயாராகவே இருக்கிறோம்,'' என்றார்.அமைச்சரின் இந்த அறிவிப்பின் வாயிலாக, கோவைக்கு வெகுவிரைவில் மெட்ரோ ரயில் திட்டம் கிடைப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.பா.ஜ., மாநில செயலாளர் வானதி சீனிவாசன் கூறியதாவது:2013ல், ரயில்வே திட்டத்துக்கென தமிழகத்துக்கு, 856 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. 2014, 2015, 2016 ஆண்டுகளில், முறையே, 1,000, 1,500, 2,000 கோடி ரூபாய்களை, மோடி தலைமையிலான அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது, 2,300 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.கோவையில் 'மெட்ரோ' ரயில் திட்டத்தை செயல்படுத்த, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கைய்யா நாயுடு, தமிழக முதல்வர் பழனிசாமி ஆகியோரை சந்தித்து பேசியுள்ளோம். அதனால் விரைவில் 'மெட்ரோ' ரயில் திட்டம் கோவையில் செயல்படுத்தப்படும்,'' என்றார்.

பிறந்தது நம்பிக்கை!கோவை மாநகருக்கு இனியும், 'மெட்ரோபாலிட்டன் சிட்டி' அந்தஸ்து வழங்கப்படவில் லை. உள்ளூர் திட்டக்குழுமம் (லோக்கல் பிளானிங் அத்தாரிட்டி) ஆகவே செயல்பட்டு வருகிறது. பெருநகர வளர்ச்சிக்குழும அந்தஸ்து கிடைக்கும் முன்பே, மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு, 'மெட்ரோ ரயில்' இயக்கப்படும் என்று பா.ஜ., பிரமுகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us