கூட்டம் நடத்த ஓட்டலில் அனுமதி மறுப்பு:தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்
கூட்டம் நடத்த ஓட்டலில் அனுமதி மறுப்பு:தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்
ADDED : செப் 11, 2017 12:10 AM
கோவை;கோவையில் ஆலோசனை கூட்டம் நடத்த இறுதி நேரத்தில் அனுமதி மறுத்ததாக, ஓட்டல் நிர்வாகிகளுடன் தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க., தினகரன் அணி சார்பில், கோவை மாநகர், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காந்திபுரம், தமிழ்நாடு ஓட்டலில் நேற்று காலை நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மாநகர், மாவட்ட செயலாளர் சின்னத்துரை, அமைப்பு செயலாளரான முன்னாள் எம்.எல்.ஏ., துரை தலைமையில் நிர்வாகிகள் நேற்று காலை ஓட்டலுக்கு வந்தனர்.அப்போது கூட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட அறையில் மின்கசிவு பிரச்னை உள்ளதால், வேறு பகுதியில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து கொள்ளுமாறு ஓட்டல் நிர்வாகத்தினர் தினகரன் ஆதரவாளர்களிடம் தெரிவித்தனர்.
இதைகேட்டு அதிருப்தி அடைந்த தினகரன் ஆதரவாளர்கள், 'எங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று யாராவது சொன்னார்களா' என, கேட்டு வாக்குவாதம் செய்தனர்.தகவல் அறிந்து காட்டூர் போலீசார் அங்கு சென்று, பேச்சு நடத்தினர். இதையடுத்து அவர்கள் ஓட்டலில் இருந்து கலைந்து சென்றனர். பின், சேலஞ்சர் துரை வீட்டில் மாநகர், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.
கூட்டத்துக்கு பிறகு சேலஞ்சர் துரை கூறியதாவது: அ.தி.மு.க., பொதுசெயலாளர் சசிகலா தற்போது பணியாற்ற முடியாத சூழ்நிலையில் உள்ளார். அதனால், துணை பொது செயலாளர் தினகரன் மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். கோவையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்த முதலில் ஒரு தனியார் ஓட்டலில் இடம் கேட்டு, மறுத்துவிட்டனர்.பின், சுற்றுலாத் துறைக்கு சொந்தமான தமிழ்நாடு ஓட்டலில், இரண்டு நாட்களுக்கு முன்பே, 2,000 ரூபாய் முன் பணம் கட்டி, முன்பதிவு செய்தோம். இந்நிலையில், திடீரென காலை ஓட்டல் நிர்வாகிகள் கூட்டம் நடத்த அனுமதி மறுத்தனர். சிலரது துாண்டுதலின் பேரில் இச்சம்பவம் நடந்துள்ளது.
வரும், 12ம் தேதி பொதுக்குழு நடக்கும் என, அறிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் எங்கள் அணியில் தான் உள்ளனர். இதனால், பொதுக்குழுவில் பங்கேற்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
