ADDED : மார் 21, 2011 01:26 AM
கோவை : சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காமல் உதாசீனம் செய்த தி.மு.க.,வை புறக்கணிப்பது என கோவை மாவட்ட கவர இன(நாயுடு) முன்னேற்ற சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.கவர இன முன்னேற்ற சங்கத் தலைவர் கிருஷ்ணன், பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ் கூறியதாவது:கோவையில் தி.மு.க.,வளர்ச்சியில் கவுர நாயுடு சமூகத்துக்கு முக்கிய பங்குண்டு.
தி.மு.க., மாவட்ட கழக கட்டடம், மாநகர் கட்டடம், பஞ்சாலை கட்டடம் ஆகியவற்றை உருவாக்கியதே நாயுடு இனத்தை சேர்ந்த திராவிட இயக்க பிரமுகர்கள்தான்.தி.மு.க.,வில் இருந்து மறைந்த எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தராஜன் மேற்கு தொகுதியிலும், ரங்கநாதன் கிழக்கு தொகுதியிலும், குலசேகரன் சிங்காநல்லூர் தொகுதியிலும் வெற்றி பெற்றனர். இப்போது உள்ள மோகன் எம்.பி., ஆகவும், போடிப்பட்டி தம்பு எனும் செல்வராஜ் உடுமலை தொகுதியில் எம்.எல்.ஏ., ஆகவும் இருந்தவர்கள். மறைந்த எம்.எல்.ஏ., (காங்.,) எல்லம்ம நாயுடுவின் பணியை மறக்க முடியாது. இவற்றை எல்லாம் இன்றைய தி.மு.க., நிர்வாகிகள் மறந்து விட்டனர்.வரும் சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு, வடக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர் தொகுதிகளில் தி.மு.க.,சார்பில் போட்டியிட 23 பேர் விண்ணப்பித்தோம். ஆனாலும், தேர்தலில் சீட் மறுக்கப்பட்டு விட்டது. இந்த உதாசீனம் நாயுடு சமூகத்தை கொந்தளிக்க செய்துள்ளது.கோவையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய எங்களை தி.மு.க., அவமதித்து விட்டது. சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு எதிராக ஓட்டளிப்போம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
