மாமரத்தில் பூ, பிஞ்சு உதிர்தல் கட்டுப்படுத்துவது எப்படி? மகசூல் அதிகரிக்க தோட்டக்கலைத்துறை அறிவுரை
மாமரத்தில் பூ, பிஞ்சு உதிர்தல் கட்டுப்படுத்துவது எப்படி? மகசூல் அதிகரிக்க தோட்டக்கலைத்துறை அறிவுரை
ADDED : மார் 15, 2022 04:59 AM
பொள்ளாச்சி;மா சாகுபடியில், பூக்கள் மற்றும் பிஞ்சுகள் உதிர்வதற்கான காரணம் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து, தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.பொள்ளாச்சியில், பாசனம் குறைவான பகுதிகளில் நிரந்தர பயிராக மா சாகுபடி செய்யப்படுகிறது.
முறையாக பராமரிக்கப்பட்ட மாந்தோப்புகளில், ஆண்டுக்கொரு முறை ஏப்ரல் - மே மாதங்களில் அறுவடையின் போது, கணிசமான வருவாய் கிடைக்கும்.அதற்கு பெரிய சவாலாக உள்ளது, மாமரம் பூக்கும், காய்க்கும் தருவாயில், பூக்கள் மற்றும் பிஞ்சுகள் உதிர்ந்து போய், மகசூல் குறைந்து விடுவது தான்.தற்போது, மாவில் பூக்கள் பூத்து, பிஞ்சுகள் பிடிக்க ஆரம்பித்துள்ளது.
இப்பருவத்தில் சில மரங்களில், அதிகளவிலான பூக்கள் மற்றும் பிஞ்சுகள் உதிர்கின்றன.இதற்கான காரணங்கள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொள்ளாச்சி தெற்கு வட்டாரதோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சவுமியா கூறியதாவது:ஒரு மரத்தில், பூக்கள், பிஞ்சுகள் உதிர்வது, மரத்தின் வயது, காய்க்கும் பருவம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது. சரியான முறையில் கருத்தரிக்காத பிஞ்சுகள் உதிர்ந்து விடுகின்றன. அதிக வெயிலும், பிஞ்சுகள் உதிர்வதற்கு காரணமாகிறது.பூக்கும் பருவத்தில் பாசனம் செய்யும் நீரின் அளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ, பிஞ்சுகள் உதிரும்.தேவையான உரம் கிடைக்காவிட்டாலும், இந்த பிரச்னை ஏற்படுகிறது. பூக்கள் மற்றும் பிஞ்சுகள் அதிகளவில் உதிர்வதால், மகசூல் குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.மாமரம் பூவெடுக்கும் பருவத்தில், மூன்று வாரங்களுக்கு ஒருமுறை, தேவையான தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தோட்டத்து மண், மூன்று செ.மீ., ஆழத்துக்கு காய்ந்த பின், நீர் பாய்ச்சினால் போதும்.மாந்தோப்பை சுற்றிலும், காற்றை தடுக்கும் மரங்களை நட்டு பராமரித்தால், காற்றினால் பூக்கள் மற்றும் பிஞ்சுகள் உதிர்வதை தடுக்கலாம். இதற்கு, சவுக்கு போன்ற மரங்கள் அதிகம் பயன்படும்.உரம் அனைத்தும் சம அளவில் வைக்க வேண்டும். குறிப்பாக, மக்னீசியம் மற்றும் கால்சியம் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும். பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தி, பூக்கள், பிஞ்சு பிடித்ததற்கு பிறகே, பரிந்துரைக்கப்பட்ட மருந்தை அடிக்க வேண்டும்.
இதனால், மகரந்த சேர்க்கை பாதிக்காமல் இருக்கும். மாமரங்கள் ஆண்டுதோறும் பூப்பதற்கு, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மரம் ஒன்றுக்கு, 5 கிராம் கல்டார் மருந்தை, 5 லிட்டர் நீரில் கரைத்து, மரத்தை சுற்றிலும் வட்டமாக, அரையடி குழி தோண்டி சீராக ஊற்ற வேண்டும்.மரத்தின் வயது, பத்து ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், மேற்கூறிய அளவிலும்; பத்து ஆண்டுகளுக்கு மேல் இருந்தால், 10 கிராம் கல்டார் மருந்தை பத்து லிட்டர் தண்ணீரில், கரைத்து ஊற்ற வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால், மாவில் அதிக மகசூல் பெற முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
