/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடுத்தது 'டிராவல் ஆப்' மோசடி விழிப்புடன் இருக்க அறிவுரை
/
அடுத்தது 'டிராவல் ஆப்' மோசடி விழிப்புடன் இருக்க அறிவுரை
அடுத்தது 'டிராவல் ஆப்' மோசடி விழிப்புடன் இருக்க அறிவுரை
அடுத்தது 'டிராவல் ஆப்' மோசடி விழிப்புடன் இருக்க அறிவுரை
ADDED : செப் 08, 2025 06:15 AM
கோவை ; டிராவல் ஆப் வாயிலாக நடக்கும் மோசடி குறித்து, விழிப்புடன் இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சுற்றுலா செல்பவர்கள் பலருக்கும் டிராவல் செயலிகள் மற்றும் இணையதளங்கள் பயனுள்ளதாக இருக்கின்றன. இவற்றின் வாயிலாக, பஸ், ரயில், விமானம் மற்றும் ஓட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கான முன்பதிவுகளை, மேற்கொள்ள முடியும்.
இதற்காக பல்வேறு நிறுவனங்களின் செயலிகள், இணையதளங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 'மேக் மை டிரிப்', 'ரெட் பஸ்' ஆகிய இணையதளம் மற்றும் செயலிகளில், மோசடி அரங்கேறி வருவதாக, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
இச்செயலி அல்லது இணையதளத்தின் பெயரில் போலியாக இணையதளம் அல்லது செயலி உருவாக்கப்படுகிறது. அவற்றில் தொடர்பு எண்கள் வழங்கப்பட்டிருக்கும். டிக்கெட் முன்பதிவு ரத்து செய்யும்போதும், நேரடியாக செயலி அல்லது இணையதளத்தை பயன்படுத்தும் போதும், பிரச்னை இல்லை.
ஆனால், இணையதளம் வாயிலாக, ரத்து செய்ய முயலும்போது, போலி இணையதளங்கள் வாயிலாக, கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்ணுக்கு அழைக்க அறிவுறுத்தப்படுகிறது.
பயணிகள் அந்த எண்ணை தொடர்பு கொள்வர். அதில் பேசும் நபர் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக தெரிவிப்பார். யு.பி.ஐ., பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் அல்லது வங்கித்தகவல்களை கேட்பார்.
அதை வழங்கிய பின், அதில் கொடுக்கப்பட்டுள்ள வங்கியில் அதிக பரிவர்த்தனை நடந்திருந்தால் மட்டுமே, அடுத்த கட்டத்துக்கு செல்ல அறிவுறுத்துவார். அப்படி இல்லை எனில், அதிக பரிவர்த்தனை உள்ள வங்கிக்கணக்கு விவரங்களை, கேட்டு பெற்றுக் கொள்வார்.
தொடர்ந்து, பயணியின் மொபைல் போன் எண்ணுக்கு வந்துள்ள ஓ.டி.பி.,யை தெரிவிக்க அறிவுறுத்துவார். அவ்வாறு தெரிவித்தால் வங்கியில் உள்ள அனைத்து பணமும் திருடப்படும்.
கோவையில் அதிகபட்சமாக ஒருவர், ரூ.16 லட்சம் வரை இத்தகைய மோசடியில் இழந்துள்ளார். இந்தாண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு வரை, 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு, போலீசார் கூறினர்.