/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'விளம்பரம், லேபிள்களில் '100 சதவீதம்' வேண்டாம்'
/
'விளம்பரம், லேபிள்களில் '100 சதவீதம்' வேண்டாம்'
ADDED : ஜூன் 23, 2025 11:34 PM
கோவை; 'உணவு பொருட்கள் சார்ந்த விளம்பரங்களிலும், லேபிள்களிலும் 100 சதவீத உண்மை, துாய்மை என்பதை பயன்படுத்தக்கூடாது' என, தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த, 2018ல் வெளியான உணவு பாதுகாப்பு தரநிலைகளின் படி, உணவு சார்ந்த பொருட்களில், 100 சதவீதம் என்பதை பயன்படுத்தக் கூடாது என, தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், உணவு பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில், 100 சதவீதம் இயற்கையான தயாரிப்பு, துாய்மையான தயாரிப்பு என, பல்வேறு நிறுவனங்கள் லேபிளில் அச்சிட்டு பயன்படுத்தி வருகின்றன.
இதுபோன்ற வார்த்தை பயன்பாட்டை உடனடியாக நிறுத்தவும், அதனை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உறுதிபடுத்தவும் வேண்டும் என, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அறிவுறுத்தி, சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதாவிடம் கேட்டபோது, ''உணவு பொருட்கள் லேபிள் மற்றும் விளம்பரங்களில், 100 சதவீதம் என்பதை பயன்படுத்தக்கூடாது. 100 சதவீதம் ஆர்கானிக் என்றால், அதற்கான பிரத்யேக 'லோகோ' உள்ளது. அதை பயன்படுத்த வேண்டும்; அதற்கான 'லோகோ' இல்லாமல், ஆர்கானிக் என்று விளம்பரப்படுத்தினால், மக்கள் அதை நம்பி வாங்க வேண்டாம்,'' என்றார்.