ADDED : ஜூன் 22, 2025 11:18 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் கிடையாது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், எவ்வித மாற்றமும் இன்றி, 47 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 19,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடும் வெயில் நிலவுகிறது. டில்லி மற்றும் வட மாநிலங்களில், 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகிறது.
இளநீர் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக இளநீருக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தாளவாடி, கர்நாடகா இளநீர் சந்தைகளில், வரத்து மிகவும் குறைந்துள்ளது. கடந்த பல மாதங்களாக சிவப்பு இளநீர் வரத்து குறைந்திருந்த நிலையில், தற்போது, சற்று அதிகரித்துள்ளது.
இவ்வாறு, தெரிவித்தார்.