ADDED : ஜூலை 06, 2025 11:11 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் கிடையாது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், எவ்வித மாற்றமும் இன்றி, 47 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 19,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வட மாநிலங்களிலும் இளநீர் தேவை அதிகரிக்கிறது.
தேவைக்கு ஏற்ற வரத்து இல்லை. சில வியாபாரிகள், விவசாயிகளிடம் பொய்யான காரணங்களைக் கூறி இளநீரை குறைந்த விலைக்கு வாங்கிச் செல்ல முயற்சிக்கின்றனர். விவசாயிகளும் ஏமாந்து, குறைந்த விலைக்கு இளநீரை விற்கின்றனர்.
தேங்காய் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டே உள்ளது. ஒரு டன் பச்சை தேங்காயின் விலை மட்டையோடு, 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. அந்த அளவிற்கு தேங்காய்க்கும் இளநீருக்கும் தட்டுப்பாடு உள்ளது. எக்காரணத்தைக் கொண்டும், இளநீரின் விலையை குறைத்து விற்க வேண்டாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.