/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காடம்பாறை மருத்துவமனைக்கு பூட்டு; டாக்டர், நர்ஸ் நியமிக்கவில்லை
/
காடம்பாறை மருத்துவமனைக்கு பூட்டு; டாக்டர், நர்ஸ் நியமிக்கவில்லை
காடம்பாறை மருத்துவமனைக்கு பூட்டு; டாக்டர், நர்ஸ் நியமிக்கவில்லை
காடம்பாறை மருத்துவமனைக்கு பூட்டு; டாக்டர், நர்ஸ் நியமிக்கவில்லை
ADDED : ஜூன் 12, 2025 09:58 PM
வால்பாறை; மருத்துவமனை இருந்தும் டாக்டர் இல்லாததால், காடம்பாறை மின்வாரிய ஊழியர்கள் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர்.
வால்பாறை அடுத்துள்ள காடம்பாறை நீரேற்று மின்நிலையத்தில், சுழற்சி முறையில் நாள் தோறும், 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் காடம்பாறை நீரேற்று மின் நிலையத்தில், ஒவ்வொரு அலகின் மின் உற்பத்தி திறனை, 100 மெகாவாட்டிலிருந்து, 110 மெகா வாட் என நான்கு அலகுகளிலும் சேர்த்து, 440 மெகா வாட்டாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், காடம்பாறை, காடம்பாறை மின் நிலையம், அட்கட்டி, நவமலை ஆகிய பகுதிகளில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில், 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அந்தந்த பகுதியிலேயே மருத்துவமனை அமைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கபட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, மின் உற்பத்தி நிலையங்களில் செயல்பட்டு வந்த மருத்துவமனை பூட்டியே கிடப்பதால், ஊழியர்கள் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர்.
காடம்பாறை நீரேற்று மின் திட்ட ஊழியர்கள் கூறியதாவது:
தமிழக அரசுக்கு நாள் தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டித்தரும், காடம்பாறை நீரேற்று மின் நிலையத்தில் டாக்டர், நர்ஸ் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதால், அவசர சிகிச்சைக்காக பொள்ளாச்சி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால், வீண் அலைச்சலும், பணவிரயமும் ஏற்படுகிறது. எனவே, காடம்பாறை நீரேற்று மின் நிலையத்தின் கட்டுபாட்டில் உள்ள மருத்துவமனைகளில் டாக்டர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மின் வாரிய ஊழியர்களின் மருத்துவ வசதிக்காக காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டாக்டர் நியமனத்திற்கு பின் மருத்துவமனைகள் வழக்கம் போல் திறக்கப்படும்,' என்றனர்.