/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் சரிபார்ப்புக்கு வீடுவீடாக செல்வதில்லை: கண்காணிப்பு செய்யப்படுமென சப்-கலெக்டர் உறுதி
/
வாக்காளர் சரிபார்ப்புக்கு வீடுவீடாக செல்வதில்லை: கண்காணிப்பு செய்யப்படுமென சப்-கலெக்டர் உறுதி
வாக்காளர் சரிபார்ப்புக்கு வீடுவீடாக செல்வதில்லை: கண்காணிப்பு செய்யப்படுமென சப்-கலெக்டர் உறுதி
வாக்காளர் சரிபார்ப்புக்கு வீடுவீடாக செல்வதில்லை: கண்காணிப்பு செய்யப்படுமென சப்-கலெக்டர் உறுதி
ADDED : நவ 07, 2025 08:59 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்கு வீடுவீடாக செல்லாமல் ஒரு இடத்தில் அமர்ந்து விண்ணப்ப படிவம் வழங்கப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, 100 சதவீதம் தவறில்லா வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் வகையில், சிறப்பு தீவிர திருத்த பணி, பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில் நேற்று துவங்கியது.
வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் பின்பகுதியில் கணக்கீட்டு படிவத்தை நிரப்புவதற்கான தகவல் இடம் பெற்றுள்ளது.அதில், விண்ணப்ப படிவத்துடன் வழங்க வேண்டிய ஆவணங்கள் வரிசையில், கடந்த ஜூலை மாதம் தகுதியேற்படுத்தும் நாளாக கொண்ட சிறப்பு தீவிர திருத்த பட்டியலின் பிரதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் படி, தற்போதுள்ள பட்டியலை ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். வீடுவீடாக சென்று விண்ணப்ப படிவங்களை வழங்க வேண்டுமென ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பல இடங்களில் வீடுவீடாக செல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுவதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுப்பகுதியில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடுவீடாக சென்று விண்ணப்ப படிவங்கள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தினாலும், ஒரு சிலர் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு விண்ணப்ப படிவங்கள் வழங்குகின்றனர்.
இதனால், வயதானோர் விண்ணப்ப படிவங்களை வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், ஒரே இடத்தில் அமர்ந்து சரிபார்ப்பு பணிகளை பார்க்கும் போது உண்மையான பட்டியல் தயாராகுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக செல்வதை உறுதிபடுத்த வேண்டும். உத்தரவுக்கு மாறாக செயல்படும் ஓட்டுச்சாவடி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய தெரியாதவர்களுக்கு வழிகாட்டவும் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி கூறுகையில், ''பொள்ளாச்சி பகுதியில் வீடுவீடாக சென்று விண்ணப்பங்கள் கொடுக்க ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து கண்காணிப்பு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

