தேர்தல் பணி வேண்டாம்; 2,000 அலுவலர்கள் முறையீடு!
தேர்தல் பணி வேண்டாம்; 2,000 அலுவலர்கள் முறையீடு!
ADDED : மார் 31, 2026 11:24 PM
கோவை: புற்றுநோய் பாதிப்பு உள்ளது, இருதய நோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, பெற்றோரை கவனிக்க வேண்டும்; குழந்தைகள் தனியாக இருப்பர் இப்படி, தேர்தல் பணியில் இருந்து விலக்கு கேட்டு, 2,000 அலுவலர்கள் கடிதம் கொடுத்தது தேர்தல் பிரிவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மாவட்டத்தில், சட்டசபை தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகின்றன. வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ளது. 6ம் தேதி கடைசி நாள். அன்று தேர்தலுக்கு பயன்படுத்த உள்ள வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
ஓட்டுப்போட வாக்காளர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, ஓட்டுப்பதிவை விரைந்து முடிக்கவும் 1,200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைக்க ஆணையம் அறிவுறுத்தியது. தொகுதிக்கு குறைந்தபட்சம், 40 ஓட்டுச்சாவடிகள் அதிகமாகின. இதன்படி, 3,540 ஓட்டுச்சாவடிகள் அமைகின்றன. தேர்தல் பணியில் 17 ஆயிரத்து,102 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.
ஓட்டுச்சாவடியில் பணிபுரிவோர், தேர்தல் பிரிவினர் வழங்கும் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும். முந்தைய நாள் குறிப்பிட்ட தொகுதியில் எந்த ஓட்டுச்சாவடியில் பணிபுரிய வேண்டும் என்ற உத்தரவு வழங்கப்படும். அங்கு உடனடியாக செல்ல வேண்டும். அன்றிரவுக்குள் வரும் ஓட்டுச்சாவடிக்கு தேவையான பொருட்களை சரிபார்த்து பெற்றுக் கொள்ள வேண்டும். அன்றிரவு ஓட்டுச்சாவடியில் தங்க வேண்டும். ஓட்டுப்பதிவு முடிந்ததும் போலீஸ் பாதுகாப்புடன் வரும் வாகனத்தில் மண்டல அலுவலரிடம் இயந்திரங்களை ஒப்படைக்க வேண்டும். அதுவரை ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பொறுப்பு இருக்கிறது. இரு தினங்கள் தேர்தல் பணி இருக்கும். இதற்கான சிறப்பூதியம் ஆணையத்தால் வழங்கப்படும்.
மிகவும் பொறுப்புள்ள வேலை. வாக்காளர்களை மட்டுமின்றி, அரசியல் கட்சியினரையும் சமாளிக்க வேண்டும். தவறான நபர்களை ஓட்டளிக்க அனுமதித்து விடக் கூடாது. அதனால், உடல் நிலை, குடும்ப சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி, தேர்தல் பணியில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி, தேர்தல் பிரிவில் இதுவரை 2,000 பேர் மனு கொடுத்துள்ளனர். பெரும்பாலானவர்கள் ஆசிரியர்கள். இதில், 1,200 பேர் உடல் நிலையை காரணமாக கூறியுள்ளனர். மருத்துவ ரீதியான மற்றும் ஏற்கக் கூடிய விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலிக்கப்படுகின்றன. மற்றவை நிராகரிக்கப்பட்டு, அவர்களுக்கு 'கவுன்சிலிங்' அளிக்கப்படுகிறது.
தேர்தல் பிரிவினர் கூறியதாவது:
நேரில் பார்ப்பதற்கு நன்றாக உள்ளனர். ஆனால், புற்றுநோய் பாதிப்பு, இருதய பாதிப்பு இருப்பதாக கூறுகிறார்கள். அறுவை சிகிச்சை செய்து சில நாட்களே ஆனது என்கின்றனர். 2,000 பேர் கடிதம் கொடுத்துள்ளனர். பலரது கடிதங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மருத்துவ காரணங்களிலும், அதிக பாதிப்புள்ள காரணிகள் மட்டும் பரிசீலிக்கிறோம். ஆசிரியர்கள், பேராசிரியர்களே கடிதம் தருகின்றனர். அவர்களுக்கு தேர்தல் பணி செய்ய பயம் உள்ளது. விலக்களிக்க முடியாதென கூறினால், 'ரெகமன்டேசன்' வருகிறது. மற்ற மாவட்டங்களை விட கோவையில் வசிப்பவர்கள், வசதி படைத்தவர்களாக உள்ளனர். ஓட்டுச்சாவடியில் இரவில் தங்குவது, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை நினைத்து பயப்படுகின்றனர். பெற்றோர் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு வர முடியாது என சிலர் கூறுகின்றனர். கணவன், மனைவி இருவரும் அரசு ஊழியராக இருக்கும் பட்சத்தில், ஒருவருக்கு விலக்களிக்க கோருகின்றனர். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களையும் ஓட்டுச்சாவடி பணிக்கு நியமித்துள்ளனர். ஏற்கனவே தேர்தல் பணிக்கு அலுவலர்கள் பற்றாக்குறையாக இருக்கின்றனர். அதனால், தகுதியான கோரிக்கையை தவிர மற்றவை நிராகரிக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
