மின் இணைப்பு கிடைக்கலை குடிநீர் திட்டம் வரவில்லை
மின் இணைப்பு கிடைக்கலை குடிநீர் திட்டம் வரவில்லை
ADDED : ஜன 19, 2026 05:35 AM
மேட்டுப்பாளையம்: மின் இணைப்பு கிடைக்காததால், மேட்டுப்பாளையம் நகராட்சியின் விரிவாக்க விளாமரத்தூர் குடிநீர் திட்டம், நடைமுறைக்கு வராமல் உள்ளது.
மேட்டுப்பாளையம் நகராட்சியின், குடிநீர் விரிவாக்க திட்ட பணிக்கு, தமிழக அரசு, 22.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
நெல்லித்துறை ஊராட்சி விளாமரத்தூரில், பவானி ஆற்றில் இருந்து, தண்ணீர் எடுத்து வர, சாமண்ணா சுத்திகரிப்பு நிலையம் வரை, குழாய்கள் பதிக்கும் பணிகள் முடிந்தன. ஆற்றில் கிணறும் அமைக்கப்பட்டு உள்ளது. பத்து லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலை தொட்டி கட்டி, வெள்ளோட்டமும் நடந்து முடிந்தது.
ஆனால் மின் இணைப்பு கிடைக்காததால், பணிகள் முடிந்து, மூன்று மாதங்களுக்கு மேலாகியும், குடிநீர் திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
மேட்டுப்பாளையம் நகர்மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் கூறுகையில்,மேட்டுப்பாளையம் நகராட்சி விளாமரத்தூர் குடிநீர் திட்டப் பணிகள் அனைத்தும் முடிந்துள்ளன.
மின் இணைப்பு பெறுவதற்கு, நகராட்சியில் இருந்து, மின்வாரியத்திற்கு பணமும் செலுத்தியாகி விட்டது. மின் இணைப்பு கிடைத்தவுடன், திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும், என்றார்.
