/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உணவு வேண்டாம்; பணி நிரந்தரம் போதும்' : அரசுக்கு எதிராக துாய்மை பணியாளர்கள் கொந்தளிப்பு
/
'உணவு வேண்டாம்; பணி நிரந்தரம் போதும்' : அரசுக்கு எதிராக துாய்மை பணியாளர்கள் கொந்தளிப்பு
'உணவு வேண்டாம்; பணி நிரந்தரம் போதும்' : அரசுக்கு எதிராக துாய்மை பணியாளர்கள் கொந்தளிப்பு
'உணவு வேண்டாம்; பணி நிரந்தரம் போதும்' : அரசுக்கு எதிராக துாய்மை பணியாளர்கள் கொந்தளிப்பு
UPDATED : ஜன 13, 2026 10:18 AM
ADDED : ஜன 13, 2026 05:09 AM

கோவை: மாநகராட்சி சார்பில், பரீட்சார்த்த முறையில் துாய்மை பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. அதிகாலை 6.30 மணிக்கு சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, துாய்மை பணி மேற்கொள்ள தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர்.
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 9,454 பேருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின், 25ம் தேதி துவக்கி வைக்கிறார்.
மண்டலம் வாரியாக பரீட்சார்த்த முறையில், காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. நான்கு இடங்களில் சமையலறை ஏற்படுத்தப்பட்டு, உணவு தயாரிக்கப்படுகிறது. கிழக்கு மற்றும் வடக்கு மண்டலத்துக்கு பொதுவாக ஓரிடத்தில் தயாரிக்கப்படுகிறது. அங்கிருந்து அனைத்து வார்டுகளுக்கும் வினியோகிக்கப்படவுள்ளது. முதல்கட்டமாக, மேற்கு, வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட தொழிலாளர்களுக்கு காலை 6 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.
வடக்கு மண்டலத்தை சேர்ந்த சில தொழிலாளர்கள் உணவு பெற மறுத்தனர். அவர்கள் கூறுகையில், 'எங்களுக்கு உணவு வேண்டாம்; ஊதியம் வேண்டும். கொடுத்த உணவை திருப்பித் தருகிறோம். தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். நிரந்தர பணி வேண்டும். சட்டப்படியான ஊதியம் வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாக்கடையில் இறங்கி வேலை பார்க்கும் எந்த தொழிலாளிக்கும் நல்லது செய்யவில்லை. எங்களுக்கு ஊதியம் மட்டும் போதும். ஊதியம் கொடுத்தாலே எங்கள் குடும்பம் சிறக்கும்' என்றனர்.
மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் கூறுகையில், 'காலை சிற்றுண்டி திட்டம், 25ல் முதல்வர் துவக்கி வைக்கிறார். பரீட்சார்த்த முறையில் மண்டலம் வாரியாக வழங்குகிறோம். பொங்கல், கிச்சடி, உப்புமா, எலுமிச்சை சாதம், கலவை சாதம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு உணவு வழங்கப்படுகிறது. சென்னை, மதுரை போல், மதிய உணவு வழங்க தொழிலாளர்கள் கோரியுள்ளனர். அதிகாலை 6.30க்கு சாப்பிட்டு விட்டு வேலை செய்ய முடிவதில்லை என கூறினர். அவர்களது கோரிக்கையும் அரசின் கவனத்துக்கு சென்றுள்ளது. மதிய உணவாக திட்டம் மாற வாய்ப்புள்ளது' என்றனர்.

