குப்பை மேலாண்மை இல்லை எரித்து தள்ளுவதால் சூழல் மாசு
குப்பை மேலாண்மை இல்லை எரித்து தள்ளுவதால் சூழல் மாசு
ADDED : ஏப் 29, 2026 05:10 AM

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில், சேகரிக்கப்படும் குப்பையை முறையாக திடக்கழிவு மேலாண்மை செய்யாமல், எரித்து வருகின்றனர்.
தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ளிமலைபட்டிணம், நரசீபுரம், ஜாகீர்நாயக்கன்பாளையம், இக்கரை போளுவாம்பட்டி, மத்வராயபுரம், தேவராயபுரம், தென்னமநல்லூர், மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம் ஆகிய, 10 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், தினசரி தூய்மைப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பையை, ஊராட்சியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் தரம் பிரித்து, முறையாக திடக்கழிவு மேலாண்மை செய்ய வேண்டும். ஆனால் சில ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை பெயரளவிற்கு மட்டுமே உள்ளது. ஊராட்சியின் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் கொட்டப்படும் குப்பையை எரித்து வருகின்றனர்.
இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, கோடை காலம் என்பதால், காய்ந்த புற்களில் தீ பற்றி விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. திடக்கழிவு மேலாண்மை முறையாக செயல்படுத்தப்படுவதை, அதிகாரிகள் உறுதி செய்து, மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
