ADDED : செப் 08, 2026 09:45 PM
கோவை: பொது வினியோக திட்டத்தில் உணவு பொருட்கள் பெற ரேஷன் கார்டு மிக அவசியம். கூட்டு குடும்பமாக வசிக்கும் பலரும் அரசின் சலுகையை பெற பெயரளவில் தனி குடும்பமாக மாறிவிட்டதாக சொல்லி புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கின்றனர்.
ரேஷன் கார்டு கேட்டு வரும் விண்ணப்பம் மீது விசாரணையை கடுமையாக்க கள ஆய்வை கட்டாயமாக்கியுள்ளனர். ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு வழங்கல்துறை தாசில்தாரோ, துணை தாசில்தாரோ ரேஷன்கார்டு விண்ணப்பத்தை சரிபார்க்கிறார்.
விண்ணப்பத்தில் திருமணச்சான்று, பெயர் நீக்கச்சான்று, காஸ் சிலிண்டர், மின்கட்டணம், குடிநீர் கட்டணம், வீட்டுவரி ரசீது இணைப்பது அவசியம். அனைத்தும் சரியாக இருந்தால்தான், விண்ணப்பம் பிரிண்டிங்கிற்கு அனுப்பப்படும். ஆவணம் சரியில்லை எனில், விண்ணப்பம் ரத்தாகிவிடும்.
கள ஆய்வில் பெற்றோரது வீட்டின் அருகே குடியிருப்பதாக கூறிய, பல விண்ணப்பங்கள் சந்தேகத்தின் பேரில் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வழங்கல் துறை தாசில்தார்கள் கூறுகையில், ‘ஒவ்வொரு தாலுகாவிலிருந்தும் மாதந்தோறும் சராசரியாக, 100 விண்ணப்பங்கள் பிரிண்டிங் செல்கிறது. இம்மாதம் ஏப்., மாதத்துக்கான கார்டுகள் வந்துள்ளன. விண்ணப்பத்தின் மீது பல கோணங்களில் விசாரணை நடத்தப்படுகிறது. கள ஆய்வில் திருப்தி இருந்தால் மட்டுமே பரிந்துரை செய்யப்படுகிறது. ஆவணங்களை சரியாக இணைக்காத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன’ என்றனர்.
