ADDED : மார் 19, 2024 10:37 PM
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் லாட்ஜ், மண்டப உரிமையாளர்களுக்கான தேர்தல் நன்னடத்தை விதிமுறை குறித்த கூட்டம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., நமச்சிவாயம் தலைமை வகித்தார். இதில், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. லாட்ஜ், திருமண மண்டபங்கள் பதிவு செய்த நிகழ்ச்சிகள் குறித்த விபரங்களை போலீசாருக்கு உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். அரசியல் கட்சி சார்ந்த விருந்து மற்றும் நிகழ்ச்சிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி பெற வேண்டும். அனுமதி இன்றி நிகழ்ச்சிகள் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து விளம்பரங்கள் பிரிண்ட் செய்யப்படும் துண்டு பிரசுரம் மற்றும் பிளக்ஸ் பேனர் பகுதியில், அவை எங்கு செய்யப்பட்டது என்பது குறித்தான அச்சிடு விபரம் பதிவு செய்ய வேண்டும். லாட்ஜ்களில் மொத்தமாக நபர்களை தங்க அனுமதிக்க கூடாது. அவ்வாறு தங்கினால், எந்த காரணத்திற்காக தங்கி உள்ளனர் என்பது போன்ற விபரங்களை பெற வேண்டும்.
சந்தேகம் இருந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தங்கும் விடுதியில் விருந்து உள்ளிட்ட எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த அனுமதி இல்லை. திருமண மண்டபங்கள், லாட்ஜ்களில் மொத்தமாக பரிசு பொருட்களை வைத்து விநியோகம் செய்தல் கூடாது என, போலீசார் அறிவுரை வழங்கினர்.

