/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திட்டமிடல் இல்லை!விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய மக்கள் திணறல்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திட்டமிடல் இல்லை!விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய மக்கள் திணறல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திட்டமிடல் இல்லை!விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய மக்கள் திணறல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திட்டமிடல் இல்லை!விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய மக்கள் திணறல்
ADDED : நவ 12, 2025 11:16 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து, அதிகாரிகள் எவ்வித விழிப்புணர்வு ஏற்படுத்தாததால், விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும், கால அவகாசம் இல்லாமல் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பெற வலியுறுத்துவதால் ஒட்டுச்சாவடி அலுவலர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, 100 சதவீதம் தவறில்லா வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் வகையில், சிறப்பு தீவிர திருத்த பணி, பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில் நடைபெறுகிறது.
பொள்ளாச்சியில் அரசியல் கட்சியினர் கூட்டம், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான கூட்டம் என சம்பிராதயமாக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அரசியல் கட்சியினருக்காக கூட்டம் நடத்திய போது, ஏற்பாடுகள் எதுவும் சரியில்லை என்றும், அதிகாரிகள் பேசியது சரிவர கேட்கவில்லை, என்றும் புகார் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்களின் மேற்பார்வையாளர்களுக்கு நடத்தப்பட்ட கூட்டங்களும், சரிவர திட்டமிடல் இன்றி நடத்தப்பட்டுள்ளது. அதன்பின், பொதுமக்களுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வருவதும், விண்ணப்ப படிவம் எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எந்தவொரு விளக்கமும், விழிப்புணர்வும் வருவாய்துறை தேர்தல் பிரிவு வாயிலாக மேற்கொள்ளவில்லை.
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வரும் தகவல்கள் தெரியாமல் பொதுமக்கள் வழக்கம் போல சென்று விடுகின்றனர். வீடுகளுக்கு செல்லும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அவர்களை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவித்து படிவம் பூர்த்தி செய்ய கூறுகின்றனர்.
ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம், பொதுமக்கள், பாகம் எண் எவ்வாறு குறிப்பிடுவது, சட்டசபை தொகுதி எண், 2002ம் ஆண்டு விபரங்களை குறிப்பிட வேண்டும் என்றால், அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.
தற்போதைய சட்டசபை தொகுதி எண் தெரியும்; பழைய தொகுதி எண் குறித்து தகவல் தெரியவில்லை என தெரிவிக்கின்றனர். விண்ணப்ப படிவம் முழுவதும் பூர்த்தி செய்ய வேண்டுமா, அல்லது ஒரு பகுதி மட்டும் பூர்த்தி செய்ய வேண்டுமா என்ற அடுக்கடுக்கான கேள்விகளை மக்கள் கேட்கின்றனர். இதற்கு பதில் கூறமுடியாமல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் திணறுகின்றனர்.
ஒரு சிலர் விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொண்டு, மீண்டும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வந்த பின் அவர்களிடம் வழங்கி பூர்த்தி செய்கின்றனர். இது ஒரு புறம் என்றால், ஒரு சில பகுதிகளில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடுவீடாக செல்லாமல், ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு விண்ணப்பங்களை வழங்குகின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது. இதுபற்றி மக்கள் புகார் தெரிவித்தாலும் வருவாய்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
அரசியல் கட்சியினர் போட்டி போட்டு ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் விண்ணப்ப படிவங்களை பெற்று பொதுமக்களிடம் வழங்குவதாக கூறப்படுகிறது.
ஓட்டுச்சாவடி அலுவலர்கள், விண்ணப்ப படிவங்களை வழங்க போதுமான காலஅவகாசம் இல்லாத நிலை உள்ளது. இச்சூழலில், விண்ணப்ப படிவங்ளை வாங்கி பதிவேற்றம் செய்ய அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

