ADDED : மார் 24, 2026 10:08 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, பேக்கரிகளில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் டீ பிரியர்கள் சோகம் அடைந்துள்ளனர்.
அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக, காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிக காஸ் சிலிண்டர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, பெரும்பாலான ஓட்டல்களில், உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. புரோட்டா, தோசை போன்றவைகள் பல ஓட்டல்களில் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. விறகு அடுப்பு பயன்படுத்தும் ஓட்டல்களில் தான் புரோட்டா கிடைக்கும் என்ற நிலையும் உள்ளது.
இந்நிலையில், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதியில் உள்ள பல பேக்கரிகளில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன், டீ ரூ.15. காபி ரூ.20, பார்சல் டீ ரூ.30, பார்சல் காபி, ரூ.50 விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது டீ ரூ.20, காபி ரூ.30, பார்சல் டீ ரூ.40, பார்சல் காபி ரூ.60 என விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் டீ மற்றும் புரோட்டா பிரியர்கள் சோகம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, டீ மற்றும் புரோட்டா பிரியர்கள் கூறுகையில், டீ என்பது அன்றாட வாழ்க்கையில் நம்மை மகிழ்விக்க கிடைத்த ஒரு பானம் என கருதப்படுகிறது. திடீரென விலை உயர்த்தப்பட்டுள்ளதால், தினமும் 3 முதல் 5 டீ குடிப்போர் கூட தற்போது 2 முதல் 3 டீ களை தான் குடிக்கின்றனர். புரோட்டாவிற்காக விறகு அடுப்பு ஓட்டல்களை தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை தேவை, என்றனர்.
----
