/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேட்பு மனுத்தாக்கல் இன்று துவக்கம் உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்கணும்!
/
வேட்பு மனுத்தாக்கல் இன்று துவக்கம் உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்கணும்!
வேட்பு மனுத்தாக்கல் இன்று துவக்கம் உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்கணும்!
வேட்பு மனுத்தாக்கல் இன்று துவக்கம் உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்கணும்!
ADDED : மார் 20, 2024 12:15 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் வேட்புமனுத்தாக்கல், இன்று துவங்கி வரும், 27ம் தேதி வரை நடக்கிறது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஆவணங்கள் இல்லாமல் பணம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாயிலாக, ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு போதிய அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், வேட்பு மனுத்தாக்கல் இன்று துவங்கி, வரும்,27ம் தேதி வரை நடக்கிறது. மனுக்கள் பரிசீலனை, 28ம் தேதியும்; வரும், 30ம் தேதி மனு வாபஸ் பெறலாம். இதையடுத்து, சின்னத்துடன் கூடிய இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், வேட்பு மனுக்களை பெறுவதற்கான ஆயத்த பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:
வேட்பு மனுத்தாக்கல் இன்று துவங்குகிறது. காலை, 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்களுடன் தேவையான ஆவணங்கள் இணைக்கப்பட்டு, டெபாசிட் தொகையாக, 25 ஆயிரம் ரூபாயும்; எஸ்.சி., எஸ்.டி., பிரிவினராக இருந்தால், 12,500 ரூபாயும் செலுத்த வேண்டும்.
வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கலாம்.வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வரும் போது, தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் இருக்கும் இடத்திலிருந்து, 100 மீட்டர் துாரத்துக்குள் ஊர்வலமாகவோ, கார்களில் கூட்டமாகவோ வரக்கூடாது.
100 மீட்டர் துாரத்துக்குள், வேட்பாளருடன் இரு கார்கள் மட்டும் அனுமதிக்கப்படும். தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்துக்குள் வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே செல்லலாம். அனைத்து நடவடிக்கைளும் வீடியோ பதிவு செய்யப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

