/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செயல்படாத 'செயலி'; கிராமசபையில் அவதி
/
செயல்படாத 'செயலி'; கிராமசபையில் அவதி
ADDED : ஜூன் 21, 2025 12:12 AM

அன்னுார் : அரசு அறிவித்த செயலி முடங்கியதால், இரண்டு மணி நேரம் கிராம மக்கள் காத்திருந்தனர்.
100 நாள் வேலை திட்டத்தில் அ.மேட்டுப்பாளையம் ஊராட்சியில், கடந்த நிதியாண்டில், 59 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 24 பணிகள் நடைபெற்றன.
இப்பணிகள் கடந்த நான்கு நாட்களாக, அளவீடு செய்யப்பட்டு, ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சமூக தணிக்கை நடந்தது. சமூக தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கும் கிராம சபை கூட்டம், அ.மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. காலை 11:00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டத்தை நேரடியாக 'நிர்ணய்' என்னும் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அரசு தெரிவித்து இருந்தது.
எனினும், மதியம் 1:00 மணிக்கு, தான் செயலி செயல்பட்டது. இதனால் 2 மணி நேரம் மக்கள் காத்திருந்தனர். அதன் பிறகு கூட்டம் துவங்கி நடந்தது.
வட்டார வள அலுவலர் இம்மானுவேல் தணிக்கை அறிக்கை வாசித்தார். செய்த பணிகளை விட கூடுதலாக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் அரசுக்கு செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, ஐந்து ஆட்சேபனைகளை தெரிவித்தார்.
தொழிலாளர்கள் பேசுகையில்,' எங்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக வேலை வழங்கவில்லை. உடனே வேலை தர வேண்டும் என்றனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பீமன் உள்பட பலர் பங்கேற்றனர்.