/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செயல்படாத ஒப்பந்ததாரர்கள் பணிகள் முடக்கம்; ஒன்றிய கூட்டத்தில் சரமாரி புகார்
/
செயல்படாத ஒப்பந்ததாரர்கள் பணிகள் முடக்கம்; ஒன்றிய கூட்டத்தில் சரமாரி புகார்
செயல்படாத ஒப்பந்ததாரர்கள் பணிகள் முடக்கம்; ஒன்றிய கூட்டத்தில் சரமாரி புகார்
செயல்படாத ஒப்பந்ததாரர்கள் பணிகள் முடக்கம்; ஒன்றிய கூட்டத்தில் சரமாரி புகார்
ADDED : டிச 24, 2024 07:01 AM

அன்னுார்; அன்னுார் ஊராட்சி ஒன்றிய குழுவின் கடைசி கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
அன்னுார் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கரி, ரவீந்திரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 59 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அல்லப்பாளையம் ஊராட்சியில், 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயில் வடிகால் அமைத்தல், கணுவக்கரை ஊராட்சியில் ஆறு பணிகள் செய்தல், ஆறு பள்ளிகளில் பராமரிப்பு பணி செய்தல், அன்னுார் ஒன்றியத்தில் உள்ள 92 துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி சமையல் கூடங்களில் புதிதாக தீயணைப்பு கருவி பொருத்துதல், கோபி ராசிபுரத்தில் ஒன்பது லட்சம் ரூபாயில் சிறு பாலம் அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கவுன்சிலர் பிரபு (அ.தி.மு.க.,) பேசுகையில், எனது வார்டில், செம்மணி செட்டிபாளையத்தில் ஒன்றரை ஆண்டுக்கு முன் சாலை அமைக்க பத்து லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒன்றிய நிதியில் ஒதுக்கப்பட்டது. ஒன்றரை ஆண்டு ஆகியும் இதுவரை பணி துவங்கவில்லை. இது குறித்து ஒப்பந்ததாரிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
ஒன்றிய பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் என அனைவரிடமும் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
இதையடுத்து செம்மாணி செட்டிபாளையத்தில் சாலை அமைக்க 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கியது ரத்து செய்யப்பட்டது.
கவுன்சிலர் ஜெயபால் (பா.ஜ.,) பேசுகையில்,முக்கியமான பணிகள் குறித்து தெரிவித்தால், பொறியாளர் அலுவலகத்தில் இருந்து விரைவில் மதிப்பீடு தயாரித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்புவதில்லை. மெத்தனமாக உள்ளனர், என்றார்.
ஒன்றிய பொறியாளர் சந்திரகலா பேசுகையில், ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தி விரைவில் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
வருகிற ஜன. 5ம் தேதியுடன் பதவிக்காலம் முடிகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஒத்துழைப்பு தந்த ஒன்றிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கவுன்சிலர்கள் பேசினர்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பீர் முகமது பேசுகையில், 1996ல் நிறைவேற்றப்பட்ட பஞ்சாயத்து திருத்த சட்டத்தின் மூலம் மூன்றடுக்கு முறையில் அதிக அதிகாரங்கள் ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்தின் அடிப்படையாக ஊராட்சிகள் உள்ளன, என்றார்.
ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி அதிகாரிகள் கவுரவித்தனர். இதையடுத்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஊராட்சி ஒன்றிய குழுவின் கடைசி கூட்டம் நேற்று முடிவடைந்தது. இனி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற பிறகு வெற்றி பெறுபவர்கள் பங்கேற்கும் ஒன்றிய குழு கூட்டம்தான் அடுத்து நடைபெறும்.