மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் புழக்கம் கிடுகிடு உயர்வு! தடை உத்தரவை அமல்படுத்த ஆளில்லாத அவலம்
மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் புழக்கம் கிடுகிடு உயர்வு! தடை உத்தரவை அமல்படுத்த ஆளில்லாத அவலம்
UPDATED : அக் 06, 2026 11:35 PM
ADDED : அக் 06, 2026 08:36 PM

கோவை: ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கம் மத்திய, மாநில அரசின் தடையை மீறி பல மடங்கு அதிகரித்துள்ளது.
மனிதனுக்கு கேன்சர் முதலான நோய்களை ஏற்படுத்தவும், விலங்குகள் மீன்கள் போன்ற உயிரினங்களை அழிக்கவும், மாசு ஏற்படவும் காரணம் எனக்கூறி, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2019ம் ஆண்டில் தமிழக அரசு தடை விதித்தது.
மத்திய அரசு 2022 ல் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது.
அதை அடுத்து பிளாஸ்டிக் வேட்டை என்ற பெயரில் அதிகாரிகள் பம்பரமாக சுழன்றனர். சிறு கடைகளில் ரெய்டு நடத்தி, கிலோ கணக்கில் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர். உற்பத்தி செய்யும் ஆலைகளை கண்டுகொள்ளாமல், விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளை பிடிக்கலாமா? என அப்போது குரல் எழுந்தது.
நாள்போக்கில் அந்த வேட்டையும் அடங்கியது. தடை உத்தரவும் காற்றில் கலந்தது. இப்போது ஒளித்து மறைத்து யாரும் பிளாஸ்டிக் பொருள், பைகள் விற்பதில்லை. காந்திபுரம், டவுன்ஹால், ஆர்எஸ்புரம் என பிரதான பகுதிகளிலேயே சர்வ சாதாரணமாக கிடைக்கிறது.
பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த அதிகாரிகளுக்கு மனம் இல்லை; அவர்களை முடுக்கிவிட அரசுக்கு நேரமில்லை. 2018ல் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் எளிதில் மக்கும் கேரி பேக்குகளை விற்க, பசுமை அங்காடி அமைக்கப்பட்டது. மண்டல அலுவலகங்களிலும் அதை விரிவுபடுத்துவோம் என அறிவித்தது. ஆனால், மெயின் ஆபீசில் திறந்த பசுமை அங்காடியே சில மாதங்களில் மூடப்பட்டது.
பின்னர் 2023 ல் மாநகராட்சி ஸ்பெஷல் டீம் அமைத்தது. அந்த டீம் மாநகராட்சி அருகே ஜோராக புழங்கிய பாலிதீன் பைகளை கூட தடுக்கவில்லை. இதனால் பொதுமக்களும், ‘ஓகோ, பிளாஸ்டிக்கால் இனிமேல் தீமை ஏற்படாது போலும்’ என்று புரிந்து கொண்டனர். பழக்கடை, ஓட்டல், தள்ளுவண்டி, சந்தை என எங்கேயும் எப்போதும் வியாபித்து புழங்குகிறது பிளாஸ்டிக் பைகள்.
நகரம் முழுவதும் தினமும் வீசி எறியப்படும் குப்பைகளில் பிளாஸ்டிக்கின் பங்கு கணிசமானது. குப்பைகளையும் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து தான் வீசுகின்றனர். பாவப்பட்ட வாயில்லா ஜீவன்களான ஆடு மாடு நாய்கள் தின்று வயிறு வீங்கி சாகின்றன. கடலுக்கு போகும் பிளாஸ்டிக் குப்பையால் மீன்கள் சாகின்றன. சிதைந்து மைக்ரோபிளாஸ்டிக்காக மாறுவது தண்ணீர் மற்றும் உணவு வழியாக மனித உடலுக்குள் புகுந்து மெல்லக் கொல்கின்றன.
ஏழாம் அறிவு இருப்பதாக சந்தேகிக்கப்படும் அதிகார வர்க்கத்துக்கே பிளாஸ்டிக்கால் ஏற்படும் நாசம் உரைக்கவில்லை என்றால், ஆறுக்கு கொஞ்சம் ஒட்டியிருக்கும் சாதாரண மக்கள் எப்படி உணர போகிறார்கள்? சில அதிகாரிகளிடம் தடை பற்றி பேசியபோது கிடைத்த ரியாக்ஷன்:
”பொது இடத்தில் புகை பிடிக்க தடை. கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை. ஏர் ஆரன் அடிக்க தடை. ஹெல்மட் போடாமல் டூவீலர் ஓட்ட தடை. லாட்டரிக்கு தடை. ஒன்வேயில் வாகனம் செல்ல தடை. இப்படி நூற்றுக் கணக்கில் தடைகள் உள்ளன. ஏதாவது நடைமுறையில் பலன் தருகிறதா? அப்படித்தான் பிளாஸ்டிக் தடையும்!”
இவர்களை நம்பி தடை போட்ட அரசுகளை என்ன சொல்வது? பிளாஸ்டிக் லாபியும் வலிமையானது. ஆண்டுக்கு 20 சதவீத வளர்ச்சி காணும் தொழில். அவர்களிடமும் பேசினோம். “அதிகாரிகள் தாராளமாக தங்கள் கடமையை செய்யட்டும். நாங்களா தடுக்கிறோம்? தடை செய்யப்பட்ட, தடை இல்லாத பிளாஸ்டிக்களுக்கு சில மைக்ரான்களே வித்தியாசம். அதை தெளிவாக தெரிவித்து அரசு சரியான வழிமுறை வகுக்க வேண்டும் என்றனர்.
அதிகாரிகளை கேட்டோம். ”மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. சொந்த காசில் சூனியம் வைத்து கொள்கிறார்கள்” என்று பிளேட்டை திருப்பி போட்டனர். மாநகராட்சி நகர்நல அலுவலர் சுபாஷ் காந்தியிடம் பேசினோம். நாங்கள் கடமை தவறவில்லை. ஜனவரி முதல் செப்டம்பர் வரை 6,715 கடைகளில் சோதனை நடத்தினோம். 3,456 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்தோம். ரூ.19 லட்சம் அபராதம் விதித்தோம். நேற்று கூட ராம்நகரில் உள்ள ஒரு லாரி கம்பெனியில் 630 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்து, ரூ.25,000 அபராதம் விதித்துள்ளோம் என்றார்.
இது நம் உயிர் பிரச்னை. சூழல் பிரச்னை. நாமே களம் இறங்கினால் தவிர தடுக்க முடியாத பூதம். உங்கள் வீட்டில், ஏரியாவில் வெற்றிகரமாக பிளாஸ்டிக்கை ஒழித்தவர்கள் அனுபவத்தை எங்களுக்கு எழுதுங்கள்; வெளியிட்டு மற்றவர்களை தூண்டுவோம். மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் இல்லாத கோவையை உருவாக்குவோம்.
