/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மறுசுழற்சி செய்ய முடியாத கழிவு இப்படியும் ஒரு சவால்!திடக்கழிவு நிர்வாகத்தில் தொய்வு
/
மறுசுழற்சி செய்ய முடியாத கழிவு இப்படியும் ஒரு சவால்!திடக்கழிவு நிர்வாகத்தில் தொய்வு
மறுசுழற்சி செய்ய முடியாத கழிவு இப்படியும் ஒரு சவால்!திடக்கழிவு நிர்வாகத்தில் தொய்வு
மறுசுழற்சி செய்ய முடியாத கழிவு இப்படியும் ஒரு சவால்!திடக்கழிவு நிர்வாகத்தில் தொய்வு
ADDED : மே 28, 2024 01:04 AM

கோவை;மறுசுழற்சி செய்ய முடியாத 'சோபா செட்', மெத்தை போன்ற கழிவுகளை மேலாண்மை செய்ய 'இன்சினேட்டர்' வசதி இல்லாததால், திடக்கழிவு மேலாண்மை சவாலாக இருக்கிறது. நீர்நிலைகளில் இவை அடைத்துக்கொள்வதால், இவற்றை என்ன செய்வதென தெரியாமல், மாநகராட்சி குழம்பித் தவிக்கிறது.
மாநகராட்சி பகுதிகளில் மக்கும், மக்காதது, 'இ-வேஸ்ட்' என, தினமும், 1,250 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது.
இக்குப்பை, வெள்ளலுார் குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டதால், சுற்றுப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் வரை, பிரச்னை செல்ல விசாரணையும் நடக்கிறது. மக்கும் குப்பையானது, நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையங்கள் வாயிலாக மேலாண்மை செய்யப்படுகிறது.
'பிளாஸ்டிக்' கழிவு, சிமென்ட் தயாரிப்பு போன்றவை தயாரிக்க, தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.
இரும்பு, பிளாஸ்டிக் கழிவுகளுக்கு காசு கிடைக்கும் என்பதால், ரோட்டோரம் கிடக்கும் இவற்றை சேகரிக்கவே, தனி ஆட்கள் உண்டு.
ஆனால் சோபா செட், மெத்தை கழிவுகளால் எந்த பயனும் இல்லை; மறு சுழற்சியும் செய்ய முடியாது. எனவே, மயானங்கள் அருகே வீசப்படும் மெத்தைகள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் சோபா செட், ஸ்பாஞ்ச் போன்றவை அப்படியே தேங்கிக்கிடக்கிறது.
சென்னை மாநகராட்சியில், இக்கழிவுகளை மேலாண்மை செய்ய, எரியூட்டும் 'இன்சினேட்டர்' வசதி உண்டு.
சென்னைக்கு அடுத்து பல்துறை வளர்ச்சி கண்ட, கோவை மாநகராட்சியில் இவ்வசதி இல்லாததால், திடக்கழிவு மேலாண்மையில் தொய்வு ஏற்படுகிறது.
வெள்ளலுார் குப்பை கிடங்கில், பெரும்பாலான தீ விபத்துகளுக்கு மெத்தை உள்ளிட்ட கழிவுகளே, காரணமாக இருக்கின்றன.
எனவே, இக்கழிவுகளை துாய்மை பணியாளர்கள் வாங்குவதற்கு தயங்குகின்றனர்.
வேறு வழியின்றி, நீர் நிலைகளில் இக்கழிவுகள் வீசப்படுவதால் தண்ணீர் மாசுபடுவதுடன், மழைகாலங்களில் அடைப்புக்கும் வழிவகுக்கிறது. ஆகவே, இப்பிரச்னைக்கு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம்.