/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடகிழக்கு பருவமழை; பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
/
வடகிழக்கு பருவமழை; பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
வடகிழக்கு பருவமழை; பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
வடகிழக்கு பருவமழை; பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
ADDED : அக் 26, 2025 10:31 PM
மேட்டுப்பாளையம்: வடகிழக்கு பருவமழை அதிகமாக இருப்பதால், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு, கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்காச்சோளம், சோளம், கொண்டைக்கடலை ஆகிய பயிர்களில், மகசூல் இழப்பினை தவிர்க்கும் வகையில், இப்பருவத்தில் காப்பீடு செய்திட வேண்டும். மக்காச் சோளம் ஒரு ஏக்கருக்கு ரூ.545ம், கொண்டைக்கடலைக்கு ரூ. 254ம், சோளத்திற்கு ரூ.173ம் செலுத்தி, உரிய காலக்கெடுவிற்குள் பயிர் காப்பீடு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படும் மக்காச்சோளம் பயிருக்கு, அதிகபட்சமாக காப்பீடாக ஒரு ஏக்கருக்கு ரூ. 36 ஆயிரத்து 300, சோளம் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.11,503ம், கொண்டைக்கடலை பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.16,940 வழங்கப்படும். மக்காச்சோளம் பயிருக்கு காப்பீடு செய்திட காலக்கெடு நவம்பர் 30ம் தேதியும், சோளத்திற்கு, டிசம்பர் 16ம் தேதியும், கொண்டைக் கடலைக்கு நவம்பர் 30ம் தேதி காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் நடப்பிலுள்ள சேமிப்பு வங்கி கணக்கு புத்தகம் நகல், ஆதார் அட்டை நகல், பயிர் சாகுபடி அடங்கல், விண்ணப்ப படிவம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உரிய தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். மழையால் மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் உரிய காப்பீடு தொகை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.----

