/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை! அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வலியுறுத்தல்
/
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை! அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வலியுறுத்தல்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை! அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வலியுறுத்தல்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை! அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வலியுறுத்தல்
ADDED : அக் 03, 2024 04:11 AM
பொள்ளாச்சி : 'அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,' என, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, கோட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்தார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலை அலுவலர் கணபதி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அக்., மாதம் முதல் டிச., மாதம் வரை, வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் இருந்த அதிகப்படியான மழை பொழிவை போல், வடகிழக்கு பருவமழை காலத்திலும் அதிகப்படியான மழை பொழிவு இருக்க கூடும். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
தாசில்தார்கள், தங்களது தாலுகாவுக்கு உட்பட்ட எல்லைக்குள் அமைந்துள்ள கிராமங்களில், மழை காலங்களில் ஏதேனும் பாதிப்புகள் எதிர்பாராமல் நடந்தால், உடனுக்குடன் தகவல்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக, ஒவ்வொரு கிராமம் மற்றும் குக்கிராமத்திலும் நீச்சல், மரம் ஏறும் திறன் உள்ளவர்களை கொண்டு, முதல் தன்னார்வலர்கள் குழு அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு தன்னார்வலர் குழுவிலும், 10 பேர் இடம் பெற்றிருக்க வேண்டும். வருவாய்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, சுகாதாரத்துறை மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் அடங்கிய மண்டல குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும். பேரிடர் காலங்களில் நிவாரண முகாம் அமைக்க சில பள்ளிகளை அடையாளம் கண்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பருவமழை துவங்கும் முன்னரே, மழை காலங்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள், மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, முக்கிய அரசு துறைகளுடன் இணைந்து மாதிரி ஒத்திகை நடத்த வேண்டும். காவல்துறை, தீயணைப்பு துறை அலுவலர்கள் இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தாலுகா அலுவலகங்கள் மற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள 'வாக்கி டாக்கி' சாதனங்கள் நல்ல நிலையில் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள ஏதுவாக முதல் தன்னார்வலர்கள், அனைத்துறை அலுவலர்கள், தொலைபேசி எண்கள் அடங்கிய பதிவேடு ஒன்றை தயாரித்து வைத்திருக்க, தாசில்தார்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகங்களில், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் துவங்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் இருதய நோய் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
கோட்டத்துக்கு உட்பட்ட குளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். ஓடைகளை துார்வார நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. நகராட்சிக்கு உட்பட்ட நீர் வரத்து அதிகம் உள்ள கால்வாய் பகுதிகளை துார்வாருதல், தண்ணீர் தேங்கும் இடங்கள் மற்றும் கால்வாய்களில் அடைப்பு நீங்குதல், பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பயன்படுத்தாத கல்குவாரிகளை சுற்றி கம்பி வேலி அமைத்து, எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். பாலாறு ஆஞ்சநேயர் கோவிலில், வெள்ள அபாய எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.