/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நவம்பரில் இல்லை; டிசம்பரில் பார்க்கலாம்! மாநகராட்சி கவுன்சிலர்கள் அதிருப்தி
/
நவம்பரில் இல்லை; டிசம்பரில் பார்க்கலாம்! மாநகராட்சி கவுன்சிலர்கள் அதிருப்தி
நவம்பரில் இல்லை; டிசம்பரில் பார்க்கலாம்! மாநகராட்சி கவுன்சிலர்கள் அதிருப்தி
நவம்பரில் இல்லை; டிசம்பரில் பார்க்கலாம்! மாநகராட்சி கவுன்சிலர்கள் அதிருப்தி
ADDED : நவ 29, 2024 12:26 AM
கோவை; கோவை மாநகராட்சியில் இம்மாதம் மாமன்ற கூட்டம் நடத்தாததால், கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் மாதந்தோறும் மண்டல கூட்டங்கள், நிலைக்குழு கூட்டங்கள் மற்றும் மாமன்ற கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். மண்டல கூட்டங்கள் மற்றும் நிலைக்குழு கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், மாமன்ற ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அதன் பிறகே நடைமுறைக்கு வரும். தவிர்க்க முடியாத சமயங்களில், மேயரின் முன்அனுமதி பெற்று, பணிகள் செய்து விட்டு, பின்னேற்பு தீர்மானம் நிறைவேற்றுவது வழக்கம்.
மாமன்ற கூட்டத்தில் மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., - இ.கம்யூ., - மா.கம்யூ., - ம.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர்கள் மற்றும் மண்டலத்துக்கு இருவர் வீதம், 10 கவுன்சிலர்கள் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
கடந்த அக்., மாதம் நடந்த கூட்டத்தில், வார்டு பிரச்னைகளை மாமன்றத்தில் கவுன்சிலர்கள் பேசியதற்கு மண்டல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேயர் மற்றும் கமிஷனர் கவனத்துக்கு தெரிவிப்பதற்காகவே கவுன்சிலர்கள் மன்றத்தில் பேசுகின்றனர். அதனால், மண்டல கூட்டங்களில் மேயரும், கமிஷனரும் கலந்துகொண்டால், மன்றத்தில் வார்டு பிரச்னைகளை பேச வேண்டிய சூழல் ஏற்படாது என்கிற கருத்து முன்வைக்கப்பட்டது.
தீர்மானப் பொருட்கள் இன்னும் தயாராகாததால், இம்மாதம் கூட்டம் நடத்த வாய்ப்பில்லை; டிச., 10க்குள் நடத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இதனால், அதிருப்தி அடைந்துள்ள கவுன்சிலர்கள், தீர்மானப் பொருட்கள் இல்லாவிட்டாலும் அதிகாரிகளின் நேரடி கவனத்துக்கு வார்டு பிரச்னைகளை தெரிவிக்க, மன்ற கூட்டத்தை மாதம் தவறாமல் நடத்த வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

