/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்கின்றன ஜாதிக்காய் மரங்கள்... ஊடுபயிரிலும் பிரச்னை! மண், வேர்மாதிரி சேகரித்து ஆய்வு
/
காய்கின்றன ஜாதிக்காய் மரங்கள்... ஊடுபயிரிலும் பிரச்னை! மண், வேர்மாதிரி சேகரித்து ஆய்வு
காய்கின்றன ஜாதிக்காய் மரங்கள்... ஊடுபயிரிலும் பிரச்னை! மண், வேர்மாதிரி சேகரித்து ஆய்வு
காய்கின்றன ஜாதிக்காய் மரங்கள்... ஊடுபயிரிலும் பிரச்னை! மண், வேர்மாதிரி சேகரித்து ஆய்வு
ADDED : ஏப் 09, 2025 10:22 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ள ஜாதிக்காய் மரங்கள், எவ்வித அறிகுறியும் இன்றி காய்ந்து வருகின்றன. இது குறித்து ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு செய்து, காய்ந்த மரங்களில் இருந்து வேர் மற்றும் மண் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.
பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர் மற்றும் தமிழக எல்லையோர கிராமங்களில், தென்னையில் ஊடுபயிராக ஜாதிக்காய் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில், மொத்தம், 500 ஏக்கரில் ஜாதிக்காய் சாகுபடி உள்ளது.
அண்டை மாநிலத்தை விட, ஆனைமலை பகுதிகளில் விளைவிக்கப்படும் ஜாதிக்காய், ஜாதிபத்ரி உயர்தரமாக இருப்பதால், ஏற்றுமதியாளர்கள் போட்டி போட்டு அதிக விலைக்கு வாங்கிச் செல்கின்றனர்.
ஆண்டுதோறும் ஜூன் முதல் நவ., மாதம் வரை ஜாதிக்காய் அறுவடை காலமாகும். கோட்டூரில், பொள்ளாச்சி ஜாதிக்காய் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்கப்பட்டு தரம் பிரித்து, விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இங்குள்ள விவசாயிகள் குழுவாக இணைந்து, ஜாதிக்காய் சேகரித்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு நேரடியாக விற்பனை செய்தும் வருகின்றனர்.
கோடை கால வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், திடீரென ஜாதிக்காய் மரங்கள் காய்ந்து வருகின்றன. இதனால், ஜாதிக்காய் விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். ஜாதிக்காய் மரங்களில் உள்ள அனைத்து இலைகளும் உதிர்ந்துள்ளன.
சொட்டுநீர் பாசனம் முறையில் ஜாதிக்காய் மரங்களுக்கு, அதிக தண்ணீர் பாசனம் செய்தாலும் கூட ஜாதிக்காய்கள் மரங்கள் காய்ந்து விடுவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். ஜாதிக்காய் மரங்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த, 4ம் தேதி பொள்ளாச்சி ஜாதிக்காய் உழவர் உற்பத்தியாளர் நிறுவன சார்ந்த விவசாயிகள், ஆழியாறு தென்னை ஆராய்ச்சி மைய தலைவர் சுதாலட்சுமியிடம், 'ஜாதிக்காய் மரங்கள் காய்ந்து வருவதால், இழப்பு ஏற்படுகிறது. மரத்தை காப்பாற்றுவதற்கான பரிந்துரைகளும், விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை பயிற்சிகளும் வழங்க வேண்டும்,' என வலியுறுத்தினர்.
இதையடுத்து, தென்னை ஆராய்ச்சி மைய தலைவர், கோழிக்கோடு இந்திய நறுமண பொருட்களின் ஆராய்ச்சி குழுவுக்கு இந்த பாதிப்பு குறித்து தகவல் கொடுத்தார். அதன்படி ஆராய்ச்சி குழுவினர் விஞ்ஞானி பிரசாத் தலைமையில், விஞ்ஞானிகள் பிஜி, மொகமத் நிசார், ஜிஜோ குழுவினர், ஆழியாறு தென்னை ஆராய்ச்சி மையத்தின் பயிர் நோயியல் துறை முனைவர் ராதா ஜெயலட்சுமி, உழவியல் துறை முனைவர் தவப்பிரகாஷ், ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த, இரண்டு நாட்களாக, கோட்டூர், ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், தப்பட்டைகிழவன்புதுார், திம்மங்குத்து, பூச்சனாரி, காளியாபுரம், சேத்துமடை, ஒடையகுளம் ஆகிய பகுதிகளில், பல்வேறு ஜாதிக்காய் விவசாய தோட்டங்களுக்கு சென்று அங்குள்ள மண் மாதிரி மற்றும் காய்ந்த ஜாதிக்காய் மரங்களின் வேர் மாதிரிகளை சேகரித்து ஆராய்ச்சி செய்வதற்காக கொண்டு சென்றனர்.