/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டச்சத்து உணவால் நோய்களை வெல்ல முடியும்! உலக உணவு தினத்தில் விழிப்புணர்வு
/
ஊட்டச்சத்து உணவால் நோய்களை வெல்ல முடியும்! உலக உணவு தினத்தில் விழிப்புணர்வு
ஊட்டச்சத்து உணவால் நோய்களை வெல்ல முடியும்! உலக உணவு தினத்தில் விழிப்புணர்வு
ஊட்டச்சத்து உணவால் நோய்களை வெல்ல முடியும்! உலக உணவு தினத்தில் விழிப்புணர்வு
ADDED : அக் 16, 2025 11:06 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில், உலக உணவு தினம் கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி செண்பகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், உலக உணவு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் அருட்தந்தை பினு யேசுதாஸ் பங்கேற்று பேசினார். அருட்தந்தை மெட்ரோ சேவியர், முதல்வர், துணை முதல்வர் பங்கேற்றனர்.
மழலை பிரிவை சேர்ந்த சிறுவர்கள், பல்வேறு வகையான உணவு பண்டங்களை கொண்டு வந்தனர். தானிய வகை உணவுகள், துரித உணவுகள், பழங்கள், இனிப்பு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன. இயற்கை உணவின் நன்மைகளும், துரித உணவின் தீமைகளும் விளக்கி கூறப்பட்டன.
* தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த உணவுத்திருவிழாவில், வடக்கு வட்டார கல்வி அலுவலர் வெள்ளியங்கிரி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார்.
உணவு திருவிழாவில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர்.
உடலுக்கு நன்மை தரும் உணவுகள், நன்மை தராத மற்றும் ஒவ்வாத உணவுகள், சிறுதானிய உணவுகள், மூலிகைகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள் என குழந்தைகள் உணவுப்பொருட்களை காட்சிப்படுத்தினர்.
உணவுப் பொருட்களையும் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என்றும், தேவைக்குரிய அளவில் மட்டும் உணவினை எடுக்கவேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாள்தோறும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பள்ளி ஆசிரியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் உணவுத் திருவிழாவினை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
* கோவை அமிர்தா வேளாண் கல்லுாரி நான்காம் ஆண்டு மாணவ, மாணவியர் ஊரக வேளாண் செயல்முறை பயிற்சி அனுபவ திட்டத்தின் கீழ், விவசாயிகள் இடையே பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உலக உணவு தினத்தையொட்டி, 'சிறந்த உணவும் சிறந்த எதிர்காலமும் கைகோர்த்து முன்னேறுவோம்' தலைப்பில், பொள்ளாச்சி அருகே செட்டிக்காபாளையத்தில் மக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அதில், ஊட்டச்சத்து இல்லாத உணவு, வாழ்க்கை நிலை மாற்றத்தால் பலர் நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஊட்டச்சத்து, சமநிலை உணவால் நோய்களை வெல்ல முடியும். மக்கள் பலருக்கும் உணவு குறித்த சரியான புரிதல் இல்லை.
உட்கொள்ளும் உணவில் மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, வைட்டமின், கனிமங்கள், கொழுப்பு என அனைத்தும் சீரான அளவில் இருக்க வேண்டும். அதுவே சரிவிகித உணவு என, அறிவுறுத்தப்பட்டது. மாணவியர் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தேசிய உணவு நாளையொட்டி பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்தி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர், பலவிதமான உணவு பொருட்களை தாங்களே தயார் செய்து காட்சிப்படுத்தினர்.
இயற்கை பாரம்பரிய உணவுகள், அதன் முக்கியத்துவம், உடலுக்கு நன்மை, தீமை விளைவிக்கும் உணவுகள், அவற்றை தவிர்த்தல், இல்லாதவர்களுக்கு உணவளித்தல் குறித்து மாணவர்கள் விளக்கமளித்தனர்.
தேசிய உணவு நாளின் மையக்கருத்தான பசியை போக்குதல், கலாசார உணவு வகைகளை அறிவது குறித்து, ஆசிரியர்கள் விளக்கமளித்தனர். நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.