/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சி இடத்தை குத்தகை விட ஆட்சேபனை! அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
/
நகராட்சி இடத்தை குத்தகை விட ஆட்சேபனை! அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
நகராட்சி இடத்தை குத்தகை விட ஆட்சேபனை! அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
நகராட்சி இடத்தை குத்தகை விட ஆட்சேபனை! அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ADDED : மார் 27, 2025 11:46 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான இடங்களை குத்தகைக்கு விடுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பொள்ளாச்சி நகராட்சி சாதாரண கூட்டம், தலைவர் சியாமளா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
ஜேம்ஸ்ராஜா (அ.தி.மு.க.,): நகராட்சி தேர்நிலையம் மார்க்கெட்டில், எட்டு பழைய கடைகள், 27 புதிய கடைகள், ஆண்டு குத்தகை அடிப்படையில் விடப்பட்டு இருந்தது. தற்போது, 56 கடைகள் புதியதாக கட்டப்பட்டு, தனித்தனி கடைகளாக விடமால், ஒரே ஏலமாக ஒன்பது ஆண்டுகளுக்கு விட்டு, குத்தகைதாரர் வாடகை வசூல் செய்யும் விதமாக அறிவுறுத்தி உள்ளீர்கள்.
இது நகராட்சியின் சார்பில், கேட்கப்பட்டதா; இயக்குனரே தெரிவித்ததா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். தனித்தனி கடைகளாக விடும் போது, நகராட்சிக்கு அதிக வருவாய் மற்றும் கோடி கணக்கில் வைப்புத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.
கவுதமன், துணை தலைவர்: இது குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனித்தனி கடைகள் ஏலம் விடுவதால் பலன் கிடைக்கும். குத்தகைக்கு விடப்படும் இடங்களில், நிரந்தர கட்டடம் அனுமதிக்க கூடாது. பள்ளி கட்டடங்கள் ஏலம் விடும் போது அந்த துறைத்தலைவரிடம் முறையான அனுமதி பெற்று ஏலம் விட வேண்டும். பாரபட்சமின்றி ஒவ்வொரு வார்டுக்கும் தலா, 10 லட்சம் ரூபாய் என ஒதுக்கீடு செய்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சாந்தலிங்கம் (கொ.ம.தே.க.,): தேர்நிலை மார்க்கெட் ஏலம் விடுவது குறித்து ஆட்சேபனை தெரிவிக்கிறேன். மார்க்கெட்டுக்கு காவல் தெய்வமான மாரியம்மனின் பெயரை தேர்நிலை மார்க்கெட்டுக்கு வைக்க வேண்டும்.
தலைவர்: நிர்வாக இயக்குனர் முடிவின்படி இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து அரசுக்கு கவுன்சிலர்களின் கருத்துக்கள் தெரிவிக்கப்படும். சட்டப்படி தான் ஒன்பது ஆண்டுகள் குத்தகை வழங்கப்படுகிறது.
ஜேம்ஸ்ராஜா: நகராட்சிக்கு சொந்தமான அம்மா மண்டபம், ஏழை எளிய மக்கள் பயன்பெறுவதற்காக கட்டப்பட்டது. இந்த கட்டடம் தெற்கு ஒன்றிய அலுவலகமாக பயன்படுத்த கொடுக்கப்பட்டு, கடந்த நவ.,27ம் தேதி நகராட்சிக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதை தனியாருக்கு வணிக பயன்பாட்டுக்கு குத்தகை கொடுப்பதால், பொதுமக்கள் பயன்பாடு என்கிற நல்ல நோக்கம் புறக்கணிப்பது போலாகும். கல்வி கூடத்துக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள், குத்தகைக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு விடப்படுகிறது. கல்விக்காக தேவைப்படும் பட்சத்தில் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என நிபந்தனை விதித்து, புதிதாக ஏலம் விடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூன்றாண்டுக்கு ஒரு முறை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். காலி இடத்தில், கட்டடம் கட்டப்படுமா என்பது குறித்து விளக்க வேண்டும்.
தலைவர்: அம்மா மண்டபம் போதிய பராமரிப்பின்றி உள்ளது. இந்த மண்டபம் ஒன்றியத்திடம் இருந்து ஒப்படைக்க கோரப்பட்டது. மாவட்ட கலெக்டர் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்துக்கு வந்த போது, அவரிடம் தெரிவித்து மண்டபம் பெறப்பட்டது. போதிய பயன்பாடின்றி உள்ள கட்டடங்கள் மட்டுமே குத்தகைக்கு விடப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த நிதியும் கல்விக்காகவே பயன்படுத்தப்படும். டெண்டர் விடும் போது, நிபந்தனைகள் விதிக்கப்படும்.
செந்தில்குமார் (தி.மு.க.,): கடந்த சில நாட்களுக்கு முன்பு, எனது வார்டை சேர்ந்த ஒருவர், ஏ.பி.டி., ரோட்டில், இரண்டாவது மாடியில் பணி செய்த போது, மின்சாரம் தாக்கி இறந்தார். மின்கம்பத்தையொட்டி இரண்டு மாடி கட்டடம் கட்ட அனுமதி அளித்தது குறித்து விளக்க வேண்டும்.
கமிஷனர்: இது குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதையடுத்து, 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஜேம்ஸ்ராஜா, வசந்த், சாந்தி ஆகியோர், மூன்று தீர்மானத்துக்கு ஆட்சேபனை கடிதத்தை நகராட்சி தலைவரிடம் வழங்கி விட்டு, 'விற்காதே, விற்காதே நகராட்சி இடத்தை விற்காதே' என கோஷங்களை எழுப்பியபடி வெளிநடப்பு செய்தனர்.

