கனிம லாரிகளில் ஜி.பி.எஸ்.,கருவி கட்டாயம்!: 30க்குள் பொருத்த கலெக்டர் கெடு
கனிம லாரிகளில் ஜி.பி.எஸ்.,கருவி கட்டாயம்!: 30க்குள் பொருத்த கலெக்டர் கெடு
UPDATED : செப் 20, 2026 04:45 AM
ADDED : செப் 19, 2026 06:41 PM

கோவை: கற்கள், ஜல்லி உள்ளிட்ட கனிமங்களை ஏற்றி செல்லும் லாரிகளில் வரும் 30க்குள் ஜி.பி.எஸ்.,கருவி பொருத்த வேண்டும் என, உரிமையாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கல் குவாரிகளில் இருந்து கனிமங்கள் ஏற்றிச் செல்ல உரிமம் வழங்கப்பட்டுள்ளது. உரிமம் வழங்கப்பட்ட அளவை விட அதிகமாக ஏற்றிச்செல்வதாக, விவசாயிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கல்குவாரி, கிரஷர் மற்றும் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
'அனைத்து கல்குவாரிகள், கிரஷர்களிலும் கட்டாயம் எடை மேடைகள் அமைக்க வேண்டும். மாவட்டத்திற்குள்ளும், வெளிமாவட்டங்களில் இருந்தும் கனிமங்களை ஏற்றி வரும் வாகனங்களில், போக்குவரத்து துறை அனுமதித்த அளவை விட கூடுதலாக கனிமங்களை ஏற்றி சென்றால், வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதம் விதித்து எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படும்' என இக்கூட்டத்தில் கலெக்டர் பவன்குமார் எச்சரித்தார்.
அவர் மேலும் பேசுகையில், ''கனிமங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை சோதனையிடும் போது, ஓட்டுனர்கள் உரிய நடைச்சீட்டு அல்லது அனுமதிச்சீட்டை காண்பிக்க வேண்டும். மொபைல் போனில் வாட்ஸ்அப் வாயிலாக காண்பிப்பதை ஏற்கக்கூடாது. அவ்வாறு காண்பித்தால், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படும்,'' என்றார்.
கலெக்டர் உத்தரவின்படி, தமிழக -- கேரள மாநில எல்லைகளில் உள்ள, சோதனைச்சாவடிகளில் கனிமங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களின் செயல்பாடுகளை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்யவுள்ளனர்.
