/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்புகளால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்: அவகாசம் வழங்கி காத்திருக்கும் அதிகாரிகள்
/
ஆக்கிரமிப்புகளால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்: அவகாசம் வழங்கி காத்திருக்கும் அதிகாரிகள்
ஆக்கிரமிப்புகளால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்: அவகாசம் வழங்கி காத்திருக்கும் அதிகாரிகள்
ஆக்கிரமிப்புகளால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்: அவகாசம் வழங்கி காத்திருக்கும் அதிகாரிகள்
ADDED : மார் 14, 2024 11:18 PM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகிறார்கள். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் அவகாசம் வழங்கி காத்திருக்கிறார்கள்.
மேட்டுப்பாளையம் நகரில், மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலை, மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, அண்ணாஜிராவ் சாலை என முக்கிய சாலைகள் உள்ளன. இச்சாலைகளில் சாலையோர கடைகள், தள்ளுவண்டி, கடைகளின் முன்பக்கம் அதிகரிப்பு மற்றும் பொருட்கள் வைப்பு என ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு இடங்களில் இருந்து, ஊட்டி செல்ல சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் வருகின்றனர். இதுதவிர வெளியூர்களில் இருந்து வேலை நிமித்தமாக வருவோர், உள்ளூர் வாசிகள் என அனைவரும் நகரின் இச்சாலைகளை பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.
தற்போது கோடை சீசன் நெருங்கி உள்ள நிலையில் ஊட்டி செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை துறையினர் கடந்த பிப்.,10ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். ஆனால் யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை.
இதையடுத்து கடந்த பிப்., 22ம் தேதி மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஆக்கிரமிப்பாளர்களுடன் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பெரும்பாலான ஆக்கிரமிப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
மீண்டும் பிப்., 27ம் தேதி கூட்டம் நடக்கும் என வருவாய் கோட்டாட்சியர் அறிவித்தார். பின் 27ம் தேதி கூட்டம் நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் பேசியதாவது:
நெடுஞ்சாலை, நகராட்சி இடங்களில், கடைகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள ஷீட்டுகளால் பஸ், லாரிகள் போவதில் சிக்கல் உள்ளது. 2 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பாளர்களே ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், நாங்கள் அகற்றிவிடுவோம். அதற்கு உண்டான அபராதமும், விதிக்கப்படும். ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி கால அவகாசம் வழங்கப்பட்டது.
ஆனால் யாரும் ஆக்கிரமிப்புகளை எடுக்கவில்லை. உங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம், எங்களுக்கு நீங்கள் ஒத்துழைப்பு தாருங்கள், என்றார். ஆனால் 2 வாரங்கள் ஆகியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்டப் பொறியாளர் முரளி குமார் கூறுகையில், இன்னும் ஒரு வாரம் காலம் அவகாசம் கொடுத்துள்ளோம். அவர்களே அகற்றாவிட்டால், நாங்களே அகற்றிவிடுவோம், என்றார்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தொடர்ந்து அவகாசம் அளித்து கொண்டே இருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வரலாம்.
அதன் பின் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றுவதில் முனைப்பு காட்ட மாட்டார்கள். மக்கள் நிம்மதியாக வாகனங்களை இயக்கி விபத்து பயம் இல்லாமல் செல்ல அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.----

