/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊருக்கு உபதேசம் செய்யும் அதிகாரிகள்! காட்சிபொருளான மழைநீர் சேமிப்பு திட்டம் அரசு அலுவலகங்களில் கட்டமைப்பு சேதம்
/
ஊருக்கு உபதேசம் செய்யும் அதிகாரிகள்! காட்சிபொருளான மழைநீர் சேமிப்பு திட்டம் அரசு அலுவலகங்களில் கட்டமைப்பு சேதம்
ஊருக்கு உபதேசம் செய்யும் அதிகாரிகள்! காட்சிபொருளான மழைநீர் சேமிப்பு திட்டம் அரசு அலுவலகங்களில் கட்டமைப்பு சேதம்
ஊருக்கு உபதேசம் செய்யும் அதிகாரிகள்! காட்சிபொருளான மழைநீர் சேமிப்பு திட்டம் அரசு அலுவலகங்களில் கட்டமைப்பு சேதம்
ADDED : ஆக 20, 2025 09:25 PM

-- நிருபர் குழு -
மழை பொழிவு குறைந்த நிலையில், நிலத்தடி நீர்மட்டம் பாதித்து வறட்சி ஏற்பட்டதால், மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்தது. அதன்விளைவாக, கடந்த 2001ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால், மழைநீர் சேகரிப்பு திட்டம் கட்டாயமாக்கப்பட்டது.
பொள்ளாச்சியில், அனைத்து வீடு மற்றும் கட்டடங்களிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயமாக்கப்பட்டது. அரசு அலுவலகங்களிலும் மழை நீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அதன்படி, ஒன்றிய அலுவலகங்களிலும், மழைநீர் சேகரிப்பு குறித்து மக்கள் தெரிந்து கொள்வதற்காக அலுவலர் நியமிக்கப்பட்டு, மாதிரி கட்டமைப்புகள் ஏற்படுத்தி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லுாரிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணிகள், கண்காட்சிகள் நடத்தப்பட்டன.
கட்டட வரைபட அனுமதியில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு கட்டாயமாக்கப்பட்டது. அதற்கான கட்டமைப்பு ஏற்படுத்திய போட்டோவுடன் சமர்பித்தால் மட்டுமே, வரிவிதிப்பு செய்யப்பட்டது.
குடியிருப்புகளில் ஒட்டுமொத்தமாக சேகரிக்கப்படும் மழைநீரை குழாய்கள் வாயிலாக நிலத்தினுள் செலுத்த வசதியாக, குழி தோண்டி கூழாங்கற்கள், மணல் கழிவு, ஜல்லிக்கற்கள் அடுக்கடுக்காக நிரப்பப்பட்டது. இத்திட்டத்தால், மழைநீர் பெருமளவு சேமிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டது.
ஆரம்பத்தில், தீவிரம் காட்டப்பட்ட இந்த திட்டம், தற்போது, பெயரளவுக்கு செயல்படுத்தப்படுகிறது. பொள்ளாச்சியில், புதிதாக கட்டப்பட்ட நகராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகங்கள், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட சில அரசு அலுவலகங்களில் இக்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மற்ற அரசு கட்டடங்களில், இத்திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழாய்கள் பெயர்ந்து கிடக்கின்றன. அரசு அலுவலகங்களில் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் அலட்சியம் காணப்படுகிறது. மழை நீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி, முன்மாதிரியாக செயல்படுத்த வேண்டிய அரசு அலுவலகங்களிலேயே, திட்டம் சிதைந்து சின்னாபின்னமாகி காட்சியளிக்கிறது.
இந்நிலையில், மக்களிடம் இந்த திட்டத்தை எப்படி முழு அளவில் கொண்டு செல்ல முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
60 சதவீதம் இல்லை கிணத்துக்கடவு தாலுகா அலுவலக வளாகத்தின் எதிரே உள்ள, பொது இ-சேவை மைய கட்டட வெளிப்புறத்தில் மழை நீர் சேகரிப்பு குழாய் பூமிக்கு அடியில் செல்லாமல் கட்டடத்தின் பாதியிலேயே உள்ளது. இதனால் மழை நீர் சேமிப்பு திட்டம் கேள்விக்குறியாகிவிட்டது.
மற்ற அரசு அலுவலகங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், 60 சதவீத வீடுகளில் இக்கட்டமைப்பு இல்லை என, அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கின்றனர்.
காட்சிப்பொருள் உடுமலை பொதுப்பணித்துறை, பி.ஏ.பி., செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஏராளமான கட்டடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதிகாரிகள் அலட்சியத்தால், தற்போது அவை முழுவதும் அழிந்துள்ளது.
வீடுகள், வணிக வளாகங்கள் கட்டும் போது, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளதை உறுதிப்படுத்தி, அனுமதியளிக்கும் உடுமலை நகராட்சி அலுவலகத்தில், பழைய கட்டடத்தில் அமைக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு தொட்டியில், எழுதப்பட்ட அறிவிப்பு மட்டுமே மிஞ்சியுள்ளது. குழாய், தொட்டிகள் பராமரிப்பின்றி சீர்குலைந்துள்ளது.
புதிய அலுவலக கட்டடத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பே அமைக்கப்படவில்லை. அதே போல், பொதுப்பணித்துறை கட்டடங்கள் பிரிவு கட்டுப்பாட்டிள்ள பள்ளி வளாகங்கள், தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் என அனைத்து அரசு அலுவலகங்களிலும், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் முறையாக பராமரிக்கப்படாமல், மண் மூடியும், சிதிலமடைந்தும் காணப்படுகிறது.
பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு அலுவலகம் மற்றும் அரசு ஆய்வு மாளிகையிலேயே , இத்திட்ட கட்டமைப்புகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. புதிதாக கட்டப்படும் அரசு அலுவலகங்களில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைப்பது குறித்து அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
அதே போல், கிராமங்களை நிர்வகிக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மழை நீர் சேகரிப்பு தொட்டி, கழிவு நீர் சேமிக்கும் கலனாக மாறியுள்ளது.
இனியாவது கவனியுங்க! மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முறையாக பின்பற்றினால், நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்கு செல்வதை தடுத்து, நீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். அதற்கான முயற்சியில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
மழைநீரை சேமிக்கும் திட்டத்தை செயல்படுத்தி நீர் மட்டத்தை உயர்த்துவோம். குளம், குட்டைகளை துார்வார அரசும் உதவுவதுடன், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை துாசு தட்டி மீண்டும் முழு அளவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வணிக வளாகங்கள், தனியார் பள்ளிகள், தொழிற்சாலைகள், வீடுகளில் இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தவும், தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும், என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், 'அரசு கட்டடங்கள் பராமரிப்பு, பொதுப்பணித்துறை வசம் உள்ளது. அவர்கள் தான் மழை நீர் சேகரிப்பு அமைப்பை சரி செய்ய வேண்டும்,' என்றனர்.