/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஏப் 06, 2025 09:55 PM

வால்பாறை; வால்பாறையில், நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
சுற்றுலா பயணியர் அதிகம் வந்து செல்லும் வால்பாறையில், மக்கள் நடந்து செல்ல வசதியாக நகராட்சி சார்பில், தடுப்புக்கம்பியுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், நகராட்சி அலுவலகம் முதல், காந்திசிலை வரையில் உள்ள நடைபாதையில், மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால், மக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பரிதவிக்கின்றனர். ஆக்கிரமிப்பு கடைகளால், மக்கள் ரோட்டில் நடந்து செல்லும் போது விபத்து ஏற்படுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை நகராட்சி அலுவலகம் முன், மக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை, நகராட்சி அதிகாரிகள் பாரபட்சமின்றி உடனடியாக அகற்ற வேண்டும்.
ஒரு சில வியாபாரிகளின் சுய நலனுக்காக, மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசின் திட்டத்தின் கீழ், சாலையோர வியாபாரிகளுக்கு கடை வைக்க, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், நகராட்சி சார்பில் தனி இடம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறை நகரில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோட்டில் தான் அதிக அளவில் ஆக்கிரமிப்புக்கடைகள் உள்ளன. நகராட்சி அலுவலகம் முன்பாகவும், பழைய பஸ் ஸ்டாண்ட், காந்திசிலை உள்ளிட்ட பகுதியில், ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் உள்ளதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகரில் நடைபாதையில் உள்ள, ஒட்டு மொத்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வருவாய்த்துறை, நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, போலீஸ் ஆகிய நான்கு துறையும் ஒன்றாக இணைந்தால் மட்டுமே ஆக்கிரமிப்புக்கடைகளை அகற்ற முடியும்.
இவ்வாறு, கூறினர்.