/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்ட மின்வேலிகளில் அதிகாரிகள் ஆய்வு! யானை உயிரிழப்பு சம்பவம் எதிரொலி
/
தோட்ட மின்வேலிகளில் அதிகாரிகள் ஆய்வு! யானை உயிரிழப்பு சம்பவம் எதிரொலி
தோட்ட மின்வேலிகளில் அதிகாரிகள் ஆய்வு! யானை உயிரிழப்பு சம்பவம் எதிரொலி
தோட்ட மின்வேலிகளில் அதிகாரிகள் ஆய்வு! யானை உயிரிழப்பு சம்பவம் எதிரொலி
ADDED : நவ 01, 2025 05:27 AM

தொண்டாமுத்தூர்: மேட்டுப்பாளையத்தில், மின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழந்த விவகாரத்தின் எதிரொலியாக, கோவை வன கோட்டத்தில் உள்ள தனியார் தோட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள, சோலார் மின்வேலிகளை, வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவை வனக்கோட்டத்திற்குட்பட்டு, மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை, பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை, காரமடை, மேட்டுப்பாளையம் ஆகிய ஏழு வனச்சரகங்கள் உள்ளன.
இங்குள்ள காட்டு யானைகள், காட்டு பன்றிகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி, விளைநிலங்களுக்குள் புகுந்து, சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இதை தடுக்க, விவசாயிகள் தங்களின் தோட்டங்களில், சோலார் மின் வேலிகள் அமைத்துள்ளனர். சிலர், சட்டவிரோதமாக நேரடி மின் இணைப்பில், மின் வேலி அமைப்பதால், அதில் சிக்கி காட்டு யானைகள் உயிரிழக்கின்றன.
கடந்த 28ம் தேதி, மேட்டுப்பாளையம் வனச்சரகம், ஓடந்துறை பகுதியில் தனியார் தோட்டத்தில் நேரடி மின் இணைப்பின் மூலம் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி, 15 வயது யானை உயிரிழந்தது. இது தொடர்பாக, தோட்ட உரிமையாளர் மீது, வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
யானை உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, கோவை வனக்கோட்டத்தில் உள்ள, 7 வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில், நேரடி மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
பெயர் வெளியிட விரும்பாத வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழ்நாடு மின் வேலிகள் விதிகள் 2023ல் கூறப்பட்டுள்ள வழிமுறைகளின்படி, சோலார் மின் இணைப்பு சரியாக செயல்படுகிறதா, நேரடி மின் இணைக்கப்பட்டுள்ளதா, அதில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது, சோலார் மின் வேலி அமைக்க உரிய அனுமதி பெற்று இருக்கிறார்களா, புதிய சோலார் மின் வேலி அமைக்க, கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் எத்தனை என்பன போன்ற விவரங்களை, சேகரித்து வருகிறோம்' என்றார்.

